பதிண்டா: பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பதிண்டா ராணுவ மையத்தில் இன்று (ஏப்ரல் 12) அதிகாலை நடந்த துப்பாக்கிச் சூட்டில் நான்கு ராணுவ வீரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக இந்திய ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பீரங்கிப் பிரிவைச் சேர்ந்த நான்கு ராணுவ வீரர்கள் உயிரிழந்ததாக ராணுவ அதிகாரிகள் அறிக்கை வெளியிட்டிருந்தனர்.
இந்த தாக்குதலில் வேறு ராணுவ வீரர்களுக்குக் காயங்கள் அல்லது பொருட்சேதம் எதுவும் பதிவாகவில்லை என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. துப்பாக்கிச்சூடு நடந்த பகுதி சீல் வைக்கப்பட்டு, பஞ்சாப் காவல்துறையுடன் ராணுவ விசாரணை அதிகாரிகளும் இணைந்து துப்பாக்கிச்சூடு குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்த எஸ்பி(டி) அஜெய் காந்தி தலைமையிலான உள்ளூர் காவல்துறை குழு விசாரணைக்காக ராணுவ மையத்திற்கு விரைந்தனர்.
இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு 28 ரவுண்டுகள் கொண்ட INSAS துப்பாக்கி காணாமல் போனதாக ராணுவம் தரப்பில் புகார் அளிக்கப்பட்டதாக போலீசார் தகவல் தெரிவித்திருந்தனர். மேலும் இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் பயங்கரவாத தாக்குதலா அல்லது ராணுவ வீரர்களுக்குள் நடந்த மோதலா என்பதை அதிகாரிகள் உறுதிப்படுத்தாமல் இருந்தனர்.
மேலும் இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் காணாமல் போனதாகப் புகார் அளிக்கப்பட்ட INSAS துப்பாக்கி சம்பந்தப்பட்டுள்ளதற்கான அனைத்து அம்சங்களும் கண்டறியப்பட்டுள்ளதாகவும், இந்த சம்பவத்தில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் உயிரிழப்பு குறித்து அவர்களின் குடும்பத்தினருக்குத் தெரிவிக்கப்பட்டு வருவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இது தீவிரவாத தாக்குதல் அல்ல என்றும், வெளி நபர்களால் நடத்தப்பட்ட தாக்குதல் அல்ல, ராணுவ வீரர்களுக்குள் ஏற்பட்ட பிரச்சினையில் நடந்த துப்பாக்கிச் சூடு என்றும், இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து நாங்கள் ராணுவ அதிகாரிகளுடன் தொடர்பில் இருக்கிறோம் என்று கூடுதல் காவல்துறை இயக்குநர் சுரீந்தர் பால் சிங் பர்மர் பர்மர் கூறியதாக பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும் பதிண்டாவின் மூத்த காவல்துறை கண்காணிப்பாளர் குல்னீத் சிங் குரானா, இது ஒரு பயங்கரவாத சம்பவம் அல்ல என்று மீண்டும் உறுதிப்படுத்தினார். மேலும் இந்தச் சம்பவத்தை ராணுவ வீரர்களுக்குள் நடந்த தகாராறு என்று அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் இது fratricidal issue ஆக தோன்றுவதாகக் கூறியுள்ளார். காவல்துறையின் விசாரணைக் குழுக்கள் ராணுவ மையத்திற்குள் சென்றுள்ளனர். குற்றம் நடந்த இடத்தில் தடயவியல் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன, மேலும் உண்மையாக என்ன நடந்தது என்பதைக் கண்டறியத் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அவர் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: DC VS MI : முதல் வெற்றியை போராடி பெற்ற மும்பை அணி!