தன்பாத்: ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத் பகுதியைச் சேர்ந்த தம்பதி விகாஸ் ஹசரா மற்றும் பிரேமா ஹசரா. மருத்துவர்களாக இருவரும் தனியாக மருத்துவமனையை நடத்தி வருகின்றனர். மேலும் மருத்துவமனையின் உள்ளேயே வீடு அமைத்து இருவரும் தங்கி வருகின்றனர். இந்நிலையில் மருத்துவமனையின் இரண்டாவது மாடியில் உள்ள ஆய்வுக் கூடம் மற்றும் மருந்தகத்தில் திடீர் தீப்பற்றியதாகக் கூறப்படுகிறது.
மளமளவெனப் பரவிய தீ ஒட்டுமொத்த கட்டடத்தையும் உருக்குலைக்கத் தொடங்கியதாகக் கூறப்படுகிறது. இதில் விகாஸ் மற்றும் பிரேமா தங்கியிருந்த குடியிருப்பு பகுதியிலும் தீ பரவியுள்ளது. மருந்துகள் தீயில் எரிந்து ரசாயன கழிவுகள் காற்றில் கலந்ததால் கடும் புகை வெளியேறியது.
விகாஸ் - பிரேமா தம்பதி மற்றும் உறவினர்கள் தங்கியிருந்த பகுதியில் தீயுடன் புகை நுழைந்ததால் அனைவருக்கும் மூச்சுத் திணறல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்து 8 வாகனங்களில் விரைந்த தீயணைப்புத் துறையினர், தீ அணைப்பு பணிகளில் மும்முரம் காட்டினர்.
ஒருபுறம் மருத்துவமனையில் சிக்கிக் கொண்ட நோயாளிகளைப் பத்திரமாக மீட்க, மறுபுறம் தீயணைப்பு பணிகள் தீவிர நடைபெற்றன. இதில் மருந்து புகையால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு, மருத்துவர்கள் விகாஸ் மற்றும் பிரேமா தம்பதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மருத்துவமனையில் மூச்சுத் திணறல் காரணமாக மேலும் 3 பேரின் சடலங்களைக் கைப்பற்றியதாக மீட்பு படையினர் தெரிவித்தனர்.
தீ விபத்திற்கான காரணம் தெரியவராத நிலையில், மின் கசிவா அல்லது வேறேதும் காரணமா என விசாரித்து வருவதாக காவல்துறை கூறினர். திடீர் தீ விபத்தில் மருத்துவர்கள் தம்பதி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: புதுக்கோட்டையில் ஓர் 'கூகுள் குட்டப்பா'; பள்ளி மாணவன் கண்டுபிடித்த சூப்பர் ரோபோ!