உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் காசியாபாத் ரயில் நிலையத்தில் லக்னோவுக்குச் செல்லும் சதாப்தி விரைவு ரயில் நின்றுகொண்டிருந்தது. அப்போது, திடீரென ரயிலின் லக்கேஜ் வேனிலிருந்து கரும் புகை வருவதை, பயணிகள் பார்த்து ரயில்வே அலுவலர்களுக்குத் தகவல் அளித்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புப் படையும், தீயணைப்புத் துறையும் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இது குறித்து தலைமை தீயணைப்பு அலுவலர் சுனில் குமார் கூறுகையில், "ரயிலின் ஜெனரேட்டர் கார் பெட்டியிலும், லக்கேஜ் வேனிலும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. உடனடியாக லக்கேஜ்கள் அப்புறப்படுத்தப்பட்டு, தீ பரவுவது கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
ரயிலிலிருந்து தீ விபத்து ஏற்பட்ட பெட்டிகள் கழற்றிவிடப்பட்டன. இவ்விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை. விசாரணை நடத்தப்படும்" எனத் தெரிவித்தார்.
முன்னதாக, மார்ச் 13ஆம் தேதி, இதே ரயிலில் தீ விபத்து ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஸ்ரீநகரில் கோழிக்கு பறவைக் காய்ச்சல்: தடுப்பு நடவடிக்கை தீவிரம்