இந்தூர்: மத்தியப்பிரதேச மாநிலத்தில் முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையினான பாரதிய ஜனதா கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. மத்தியப்பிரதேச மாநில சட்டப்பேரவையின் பதவிக்காலம் இன்னும் சில மாதங்களில் முடிவடைய உள்ளது. இந்த ஆண்டு இறுதியில் அங்கு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற வாய்ப்பு உள்ள நிலையில் அரசியல் கட்சிகள், தங்களது தேர்தல் நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொண்டு வருகின்றன.
மத்தியப்பிரதேச மாநிலத்தில் மாநில அரசுக்கு 50 சதவீத அளவிற்கு கமிஷனை வழங்கிய பிறகே, தங்களுக்கு என ஒதுக்கப்பட்ட நிதி வழங்கப்படுவதாக மத்தியப்பிரதேசத்தைச் சார்ந்த அரசு ஒப்பந்ததாரர்கள், அம்மாநில உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எழுதி உள்ள கடிதத்தில் குறிப்பிட்டு உள்ளதாக பிரியங்கா காந்தி, நேற்றைய முன்தினம் (ஆகஸ்ட் 11) வெளியிட்ட ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டு இருந்தார்.
அது மட்டுமல்லாமல், நடந்து முடிந்த கர்நாடக மாநில சட்டப்பேரவை தேர்தலில், அம்மாநில மக்கள் 40 சதவீத கமிஷன் அரசை ஆட்சியில் இருந்து நீக்கியது போன்று, மத்தியப்பிரதேச மக்களும் இந்த 50 சதவீத கமிஷன் அரசை ஆட்சிக் கட்டிலில் இருந்து அகற்றுவர் என்று அந்த ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டு இருந்தார்.
இதேபோன்ற பதிவை அம்மாநில முன்னாள் முதலமைச்சர் கமல்நாத், அருண் யாதவ் உள்ளிட்டோர்களும் பதிவிட்டு இருந்தனர். இந்த நிலையில், பிரியங்கா காந்தி, கமல்நாத் உள்ளிட்டோரின் ட்விட்டர் பதிவுகள், மத்தியப்பிரதேச மாநிலத்தை ஆளும் பாஜகவின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் உள்ளதாகக் கூறி பாஜகவின் இந்தூர் பகுதியின் சட்டப் பிரிவு ஒருங்கிணைப்பாளர் நிமேஷ் பதக் போலீசில் புகார் அளித்தார்.
இந்த புகாரைப் பெற்றுக் கொண்ட சன்யோகிதகஞ்ச் போலீசார், பிரியங்கா காந்தி, கமல்நாத் உள்ளிட்டோரின் மீது இந்திய குற்றவியல் தண்டனைச் சட்டத்தின்படி பிரிவு 420 (மோசடி) மற்றும் 469 (புகழை கெடுக்கும் வகையில் பொய் கூறுதல்) உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து உள்ளனர்.
இந்த நிலையில், “எதிர்கட்சிகள் தொடர்ந்து பொய்களை பரப்பி வருகின்றனர். பிரியங்கா காந்தி வெளியிட்ட ட்விட்டர் பதிவு தொடர்பாக, குவாலியர் காவல் துறையினர் மேலும் பலர் மீது வழக்குப் பதிவு செய்து இருக்கிறது” என முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்து உள்ளார்.
மத்தியப்பிரதேச அரசு மீது தெரிவித்து உள்ள குற்றச்சாட்டிற்கான தகுந்த ஆதாரங்களை பிரியங்கா காந்தி தாக்கல் செய்யாவிட்டால், அவர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அம்மாநில உள்துறை அமைச்சர் நரோத்தம் மிஸ்ரா தெரிவித்து உள்ளார்.