உத்தர பிரதேசம்: லக்னோவில் நடைபெற்ற 45 வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், 11 கரோனா மருந்துகளுக்கு வரிச் சலுகையை நீட்டிப்பது, புற்றுநோய் மருந்து, தேங்காய் எண்ணெய் போன்ற பொருட்களின் வரி விகிதங்களை மறுபரிசீலனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
மேலும், “தசைச் சிதைவுக்கு சிகிச்சையளிக்க சுகாதார அமைச்சால் பரிந்துரைக்கப்பட்ட மருந்துகள், சுகாதார அமைச்சகம் மற்றும் மருந்தியல் துறையின் பரிந்துரையின் பேரில், தனிப்பட்ட பயன்பாட்டிற்காக இறக்குமதி செய்வதற்கு IGST க்கு விலக்கு அளிக்கப்படுகிறது” என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
மருந்துகளின் மீதான வரிச் சலுகை நீட்டிப்பு
இதையடுத்து சில உயிர்காக்கும் மருந்துகளுக்கு GST விலக்குகளை நிதி அமைச்சர் அறிவித்தார்.
இது குறித்து அவர் கூறுகையில், “மிகவும் விலையுயர்ந்த ஜோல்கென்ஸ்மா மற்றும் வில்டெப்ஸோ மருந்துகளுக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்க கவுன்சில் முடிவு செய்துள்ளது.
முன்னதாக ரெம்டெசிவிர் மருந்திற்கு ஐந்து விழுக்காடு , ஹெப்பரின் போன்ற ஆன்டிகோகுலண்டுகளுக்கு ஐந்து விழுக்காடு என 30 செப்டம்பர் 2021 வரை அறிவிக்கப்ட்டிருந்த சலுகைகள், தற்போது 31 டிசம்பர் 2021 வரை நீட்டிக்கப்படுகின்றன.
இதேபோல், புற்றுநோய் தொடர்பான மருந்துகள் 12 விழுக்காட்டில் இருந்து 5 விழுக்காடாக குறைக்க பரிந்துரைக்கப்படுகிறது. மேலும் இச்சலுகை 31 டிசம்பர் 2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
சிறப்பு குறைபாடுகள் உள்ள நபர்களால் பயன்படுத்தப்படும் வாகனங்களுக்கான ரெட்ரோ ஃபிட்மென்ட் கிட்களுக்கான GST விகிதங்களும் ஐந்து விழுக்காடாக குறைக்கப்பட்டுள்ளன” என்றார்.
இதையும் படிங்க: தமிழ்நாடு ஆளுநராக ஆர்.என். ரவி நாளை பதவியேற்பு