ஹைதராபாத்: 2022-23ஆம் நிதியாண்டிற்கான வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய வரும் 31ஆம் தேதி கடைசி நாள் ஆகும். தாமதமாக வரி செலுத்தினால், அபராதம் விதிக்கப்படும். அதனால், வரி செலுத்துவோர் அனைவரும் தங்களது வருமானவரிக் கணக்கை விரைவாக தாக்கல் செய்வது நல்லது.
வருமான வரித் தாக்கல் செய்வது என்பது ஒரு சிக்கலான செயல்முறையாக இருந்தது. அதனால், பெரும்பாலானவர்கள் ஆடிட்டரின் உதவியுடன் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்தனர். ஆனால், இப்போது இந்த செயல்முறை எளிதாக்கப்பட்டுவிட்டது. இப்போது பொதுமக்கள் தாங்களாகவே வருமான வரியைத் தாக்கல் செய்ய முடியும். இது குறித்து சற்று விழிப்புணர்வுடன் இருந்தால் போதும். வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்யத் தேவையான படிவங்கள், நடைமுறைகள் குறித்து விரிவாகக் காண்போம்...
படிவங்கள்: வருமான வரிக்கணக்கை தாக்கல் செய்யும்போது, சரியான ஐடிஆர்(ITR) படிவத்தை தேர்வு செய்வது முக்கியம். 50 லட்சத்திற்கும் குறைவான வருமானம் உள்ளவர்களுக்கு ITR-1 படிவம் பொருந்தும். குறுகிய கால மற்றும் நீண்ட கால மூலதனப் பலன்கள் உள்ளவர்கள் ITR-2ஐ தேர்வு செய்ய வேண்டும். எந்தப் படிவம் உங்களுக்குப் பொருந்தும் என்ற விவரங்கள் வருமான வரித்துறை இணையதளத்தில் இருக்கும்.
வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்ய தேவைப்படும் ஒரு முக்கியமான படிவம், 'படிவம் 16' (Form-16). இந்த படிவம் நீங்கள் பணிபுரியும் நிறுவனத்தால் வழங்கப்படும். அதில், உங்களது வருமானம், முதலீடுகள், வரி விலக்குகள் போன்றவற்றின் விவரங்கள் இருக்கும். கடந்த நிதியாண்டில் நீங்கள் ஈட்டிய வருமானம் தொடர்பான மொத்த விவரங்களும் இதில் இடம்பெற்றிருக்கும்.
உங்கள் ஊதியத்தைத் தவிர மற்ற வருமானம் தொடர்பான விவரங்கள் படிவம் 16A(Form-16A)-ல் இருக்கும். இந்தப் படிவத்தை நீங்கள் முதலீடு செய்யும் நிறுவனங்கள் வழங்குகின்றன. அதேபோல், உங்களின் மொத்த வருமானத்தில் எவ்வளவு வரி பிடித்தம் செய்யப்பட்டுள்ளது என்ற விவரத்தைப் படிவம் 26AS-ல் தெரிந்து கொள்ளலாம். வருமான வரித்துறையின் இ-ஃபைலிங்(E-filing) இணையதளத்திற்குச் சென்று, படிவம் 26AS-ஐப் பதிவிறக்கம் செய்தால், உங்களின் மொத்த வருமானம் மற்றும் வரி விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
முதல் முறையாக வருமான வரித்தாக்கல் செய்பவர்கள் தங்களது பான் எண் மூலம் வருமான வரி இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். அத்துடன் மின்னஞ்சல் முகவரி, தொலைபேசி எண், வங்கிக்கணக்கு விவரங்கள் உள்ளிட்டவற்றையும் பதிவு செய்ய வேண்டும்.
வரிமுறை: நம் நாட்டில் வருமான வரியைச் செலுத்த இரண்டு வரிமுறைகள் உள்ளன. ஒன்று பழைய வரிமுறை, மற்றொன்று புதிய வரிமுறை. இதில் தங்களுக்கு லாபகரமான முறையை நீங்கள் தேர்வு செய்து கொள்ளலாம். இந்த இரண்டு முறைகளில் வரியை கணக்கிடுவதற்கான கால்குலேட்டர் வருமான வரித்துறையின் இணையதளத்தில் உள்ளது.
பிரிவு 80C: மாத ஊதியம் வாங்கும் அனைவரும் வரி செலுத்தாமல் தவிர்ப்பது எப்படி?, வரியை குறைப்பது எப்படி? என்று சிந்திப்பார்கள். அவர்களுக்கான முக்கியமான பிரிவுதான் 80C. வருங்கால வைப்புநிதி, நிலையான வைப்புத் தொகை, ஈக்விட்டி இணைக்கப்பட்ட சேமிப்புத் திட்டம் (ELSS), ஆயுள் காப்பீடு, தேசிய ஓய்வூதிய அமைப்பு (NPS) உள்ளிட்டவற்றில் முதலீடு செய்வதன் மூலம், 80C பிரிவில் வரி விலக்கு பெறலாம். இந்தப் பிரிவின் மூலம் அதிகபட்சமாக ஒன்றரை லட்சம் ரூபாய் வரை விலக்குப் பெற முடியும். இதனால் உங்கள் வரிச்சுமை குறையும். அதேநேரம் கடந்த மார்ச் 31ஆம் தேதி வரை செய்யப்பட்ட முதலீடுகளுக்கு மட்டுமே இந்தப் பிரிவில் விலக்குகளைப் பெற முடியும்.
உங்களது வருமான வரிக்கணக்கில் ஏதேனும் முரண்பாடுகள் இருந்தால், உடனடியாக அதனை நீங்கள் பணிபுரியும் நிறுவனத்திடம் தெரிவித்து திருத்திக் கொள்ள வேண்டும். வரி செலுத்துவோருக்கு வழிகாட்டும் வகையில், வருமான வரித்துறை மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை மூலம் வீடியோக்கள் வெளியிடப்பட்டுள்ளன. இவற்றையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இதையும் படிங்க: Insurance Policy: அலுவலக ஊழியர்கள் டாப்-அப் பாலிசி எடுப்பது அவசியமா?