டெல்லி: அதிகரித்து வரும் அபாயகரமான காற்று மாசை தவிர்க்கும் பொருட்டு டெல்லி அரசாங்க ஊழியர்களில் 50 விழுக்காடு பேரை வீட்டிலிருந்து பணிபுரியும்படி மாநில சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கோபால் ராய் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் தனியார் நிறுவனங்களில் பணிபுரிவோரையும் வீட்டிலிருந்து வேலைபார்க்கும்படி அறிவுறுத்தியுள்ளார். முந்தைய தினத்தில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், நகரத்தில் அதிகரித்து வரும் காற்று மாசின் காரணத்தால் வரும் சனிக்கிழமை(நவ.5) முதல் ஆரம்பப் பள்ளிகளுக்கு விடுமுறை என அறிவித்திருந்தார்.
செய்தியாளர்களைச் சந்தித்த டெல்லி அமைச்சர் கோபால் ராய், 'பள்ளிகளிலுள்ள உயர் நிலை மாணவர்களை வெளியே விளையாட விடுவதைக் குறைத்துக்கொள்ள பள்ளி நிர்வாகங்களுக்கு அரசு தரப்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது. துறைசார்ந்த அலுவலர்களுடன் ஆலோசித்ததில் அரசு அலுவலர்களில் 50 விழுக்காடு பேரை வீட்டிலிருந்தபடியே பணிபுரியுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
போக்குவரத்திற்காக காற்றை மாசுபடுத்தாது பயணிக்கும் 500 ’CNG'பேருந்துகள் மக்களின் போக்குவரத்திற்காக அறிமுகப்படுத்தப்படும். மேலும், மாசைக் கட்டுப்படுத்தும் செயல்பாடுகளைக் கவனிக்க 6 மூத்த அரசு அலுவலர்கள் கொண்ட ஓர் குழுவும் நியமிக்கப்பட்டுள்ளது' என்றார்.
இதையும் படிங்க: உடல்நலனைக் கெடுக்கும் காற்று மாசுபாடு; நுரையீரலை வலுப்படுத்தும் யோகாசனங்கள்..!