போபால்: உலகில் உள்ள மொத்தப் புலிகளின் எண்ணிக்கையில் 70 விழுக்காடு புலிகள் இந்தியாவில் உள்ளன. இதனால், நம் நாட்டிற்கு புலிகளின் எண்ணிக்கையை உயர்த்துவதிலும், பாதுகாப்பதிலும் முக்கியப் பங்கு உள்ளது.
2018ஆம் ஆண்டு நிலவரப்படி நாட்டில் 2,967க்கும் அதிகமான புலிகள் உள்ளன. மொத்தமாக 18 மாநிலங்களில் 51 புலிகள் காப்பகங்கள் மூலம் பாதுகாக்கப்பட்டுவருகின்றன. அதிகபட்சமாக, மத்தியப் பிரதேச மாநிலத்தில் 526க்கும் மேற்பட்ட புலிகள் உள்ளன.
இந்த மாநிலத்தில் உள்ள பென்ச் புலிகள் காப்பகத்தில், 17 வயது கொண்ட புலி ஒன்று வாழ்நாளில் 29 குட்டிகளைப் பெற்றெடுத்தது. இதனால் இந்தப் புலி "சூப்பர்மாம்" என்று அடையாளப்படுத்தப்பட்டது. இந்தப் புகழ்பெற்ற புலி சனிக்கிழமை(ஜன.15) மாலை உயிரிழந்தது.
இதுகுறித்து வனத்துறையினர், காலர்வாலி புலியை கடந்த ஜனவரி 14ஆம் தேதி கடைசியாக பார்வையாளர்கள் கண்டனர். உடற்கூராய்வில் வயது மூப்பின் காரணமாக உயிரிழந்தது தெரியவந்துள்ளது. காலர்வாலி புலி 2008 முதல் 2018 வரையில் 29 குட்டிகளைப் பெற்றெடுத்தது. பென்ச் புலிகள் காப்பகத்தில் புலிகளின் எண்ணிக்கை உயர இந்த புலி முக்கிய காரணமாக இருந்தது எனத் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: ஒரே ஆண்டில் 126 புலிகள் உயிரிழப்பு; எந்த மாநிலத்தில் அதிகம்?