டூல்கிட் என்றால் என்ன?
டூல்கிட் என்பது குறிப்பிட்ட விவகாரத்தின் முழுமையான தகவல்கள் அடங்கிய இணைய ஆவணமாகும். குறிப்பிட்ட விவகாரம் குறித்த தகவல்களைக் கோப்பாகத் தயாரித்து மக்களின் ஆதரவைக் கோருவதுடன் பிரச்னையை தீர்ப்பதற்கான வழிகளையும் அளிக்கிறது. ஒருவர் தயாரிக்கும் டூல்கிட்டை மற்றவர் தனக்குத் தெரிந்த தகவல்களுடன் மாற்றி அமைக்கவும் முடியும்
டூல்கிட் விவகாரத்தில் நுழைந்த திஷா
பெங்களூரைச் சேர்ந்த 22 வயதான சூழலியல் செயற்பாட்டாளரான திஷா ரவி தான், கிரேட்டா தன்பர்க்கின்' ஃப்ரைடேஸ் ஃபார் ஃப்யூச்சர்' என்கிற அமைப்பை இந்தியாவில் நிறுவியவர். எனவே, அவருக்கு டூல்கிட் எடிட் செய்வது தொடர்பாக ஆக்சஸ் கிடைத்திருக்க வாய்ப்புள்ளதாகவும் கருதப்படுகிறது.
கிரேட்டா டூல்கிட்டில் என்ன இருந்தது?
வேளாண் திருத்தச் சட்டம் குறித்த டூல்கிட்டை பிரபல சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா தன்பர்க் பகிர்ந்திருந்தார். பின்னர் அந்த ட்வீட் நீக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அந்த ட்வீட்டில், இந்தியர்கள் அனைவரும் இந்த டூல்கிட்டை எடிட் செய்யலாம் எனக் குறிப்பிட்டிருந்தார். பின்னர், பலரால் எடிட் செய்யப்பட்டிருந்த டூல்கிட்டை அவர் பகிர்ந்திருந்தார்.
திஷா ரவி கைது
இந்நிலையில், பகிரப்பட்ட டூல்கிட்டை ஆய்வு செய்ததில், அதனை காலிஸ்தான் ஆதரவு அமைப்பு தயாரித்ததாகவும், திஷா ரவி தான் பின்னணியில் இருந்திருக்கிறார் என டெல்லி காவல் துறை தரப்பில் கூறப்படுகிறது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறை, 22 வயதான சுற்றுச்சூழல் ஆர்வலர் திஷா ரவி கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது.
வெளிவந்த ரகசிய ஜூம் கால்
இதுமட்டுமின்றி, இவ்வழக்கில் தலைமறைவாக உள்ள வழக்கறிஞர் நிகிதா ஜேக்கப், பொறியாளர் சாந்தனு முலுக் ஆகியோருக்கும் ஜாமீன் வழங்க முடியாத பிடிவாரண்டுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. இவர்கள் குடியரசு தினத்தன்று வன்முறையில் ஈடுபடும் நோக்கில் ஜூம் காலில் கலந்துரையாடியுள்ளதாகத் தெரிகிறது. சாந்தனுவின் மெயில் ஐடியை வைத்துத் தான் அந்த டூல்கிட் ஆவணம் தயாரிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
போலீஸ் ரேடாரில் டூல்கிட் வந்தது எப்படி?
டெல்லி காவல்துறையினரின் கூற்றுப்படி, கிரெட்டா தன்பெர்க் பகிர்ந்து மற்றும் திஷா ரவி தொகுத்த “டூல்கிட்” விவசாயிகள் போராட்டம் தொடர்பாக உருவாக்கப்பட்டுள்ளது. ஜனவரி 23ஆம் தேதி வரை, ட்விட்டரில் பலரால் பகிரப்பட்டு வந்துள்ளது. குடியரசு தினத்தன்று, திட்டமிட்டபடியே விவசாயிகள் போராட்டத்தை வன்முறை களமாக மாற்றுவதில் முக்கிய பங்கு வகித்துள்ளது. இந்த டூல்கிட் இந்தியாவின் அமைதியை சீர்குலைக்கும் நோக்கிலே பகிரப்பட்டுள்ளது. இதற்கு காலிஸ்தான் சார்பு அமைப்புகள் உறுதுணையாகச் செயல்பட்டுள்ளன.
மேலும், தன்பெர்க் மற்றும் பிற ட்விட்டர் கணக்குகளில் பகிரப்பட்டுள்ள "டூல்கிட்" உருவாக்கியவர்களின் மின்னஞ்சல் முகவரி, யுஆர்எல் மற்றும் சமூக ஊடக கணக்குகள் பற்றிய தகவல்களை வழங்குமாறு டெல்லி காவல்துறை சார்பில் கூகுள், மற்றும் பிற சமூக ஊடக நிறுவனங்களிடம் கோரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: உபா சட்டத்தில் தேசிய மாநாட்டு கட்சித் தலைவர் கைது!