வாஷிங்டன்: சர்ச்சைக்கு புகழ் பெற்றவர்களின் வரிசையில் அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப் எப்பொழுதும் முதன்மை இடத்தை வகிக்கிறார். அந்த வகையில் தற்போது மேலும் புதிய சர்ச்சையில் அவர் சிக்கியுள்ளது அனைவர் மத்தியிலும் கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆளும் கட்சிகளில் என்ன தான் பல அரசியல் கட்சி தலைவர்கள் இதுபோன்ற நிலையை சந்திருந்தாலும் ட்ரம்பின் இந்த சூழ்நிலை அரசியல் வட்டாரங்களில் ஒரு திருப்பு முனையாக அமையக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ட்ரம்பின் மீது முன்னதாக இதுபோன்று ஒரு வழக்கு தொடரப்பட்டிருந்த நிலையில் தற்போது மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே, ஆபாச பட நடிகை ஸ்டோர்மி டேனியல்ஸ் பணம் கொடுத்த வழக்கில் சிக்கிய ட்ரம்ப், தற்போது மேலும் ஒரு வழக்கில் சிக்கியுள்ளார். வெள்ளை மாளிகையிலிருந்து வெளியேறும் போது நாட்டின் பாதுகாப்பு குறித்த ரகசிய ஆவணங்களை தவறாக கையாண்ட விவகாரத்தில் தற்போது ட்ரம்ப் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். 2024 ல் கண்டிப்பாக வெள்ளை மாளிகைக்கு திரும்புவேன் என பிரச்சாரத்தில் ஈடுபட்ட வந்த ட்ரம்ப், இந்த வழக்கு விசாரணைக்காக வரும் செவ்வாய்க் கிழமை நீதிமன்றத்தில் ஆஜராகவுள்ளார்.
தன் மீதான குற்றச்சாட்டினை கடுமையாக எதிர்த்த ட்ரம்ப், அவருடைய ட்ரூத் சோஷியல் சமூக வலைதள பக்கத்தில், இது என்னை கவிழ்க்கும் சூழ்ச்சி என்றும், அமெரிக்கா கண்ட அதிபர்களில் தான் மட்டுமே இப்படியான பொய் வழக்குகளில் சம்பந்தப்படுத்தபட்டு உள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். இதற்கான ஆதாரங்கள் இன்னும் பொதுமக்கள் பார்வைக்கு கொண்டுவராத நிலையில் இதனை ஒரு முக்கிய காரணியாகக் கொண்டு அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை அவர் எதிர்த்து வருகிறார்.
கடந்த ஆண்டில் முன்னாள் அதிபர் ட்ரம்பின் வீட்டில் அரசின் பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டிருந்த நிலையில் தற்போது புதிதாக மேலும் பல ரகசிய ஆவணங்கள் வீடியோ ஆதாரங்களுடன் கைப்பற்றப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டு அவர் மீது பலத்த சந்தேகத்தை உருவாக்கி உள்ளது. ஆதாரங்கள் இன்றி யார்மீதும் குற்றம் சாட்டவில்லை என்றும், ட்ரம்பிற்கு எதிரான வீடியோ ஆதாரங்கள் சமர்பிக்கப்பட்டு குற்றங்கள் நிரூபிக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
அரசு ஆவணங்களை தவறாக கையாண்டது சம்பந்தமாக ட்ரம்ப் மீது 7 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. முன்னாள் அதிபர் ட்ரம்ப் மீது சமர்பிக்கப்பட்ட இந்த குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவர் 100 ஆண்டுகளுக்கு மேல் சிறை செல்லவும் வாய்ப்பு உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
2024 தேர்தல் நெருங்கும் வேளையில் இந்த குற்றச்சாட்டு முன்னாள் அதிபர் ட்ரம்பிற்கு மட்டுமின்றி அமெரிக்க அரசியல் களத்தில் பல்வேறு திருப்பங்களுக்கு வழிவகுக்கும் என பலர் அவர்கள் கருத்தை சமூகவலைதள பக்கங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: ரூ.2,100 கோடியில் நாட்டிலேயே மிகப்பெரிய மருத்துவமனை.. ஹைதராபாத்தில் கட்ட கேசிஆர் திட்டம்!