உலகின் முன்னணி மருத்துவ ஆய்வு பத்திரிகையான லேன்செட் இந்தியாவில் நிலவும் கோவிட்-19 இரண்டாம் அலை குறித்து ஆய்வு நடத்தியது. அதன் அறிக்கையை தற்போது வெளியிட்டுள்ள நிலையில், இந்த இரண்டாம் அலைக்கு இந்திய அரசுதான் காரணம் எனக் குற்றம்சாட்டியுள்ளது.
அந்த ஆய்வறிக்கையில், முதல் அலையை சிறப்பாக கையாண்டு வெற்றிப்பெற்றுவிட்டோம் என அரசு முன்கூட்டியே வெற்றியை அறிவித்ததே, தற்போதைய மோசமான நிலைமைக்கு காரணம்.
எச்சரிக்கை உணர்வின்றி தேர்தல், கும்பமேளா போன்ற பொது நிகழ்வுகளை அரசு முழுமையாக திறந்துவிட்டதே இந்த மோசமான பரவலுக்கு காரணம்.
பல மாநில அரசுகள் தற்போது முழு லாக்டவுன் போடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. சுகாதாரக் கட்டமைப்புகள் மோசமடைந்துவருகின்றன. படுக்கை, ஆக்சிஜன் போன்றவைக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள இந்த சூழலில் அரசு போர்க்கால அடிப்படையில் செயல்பட்டுவருகிறது. இதுபோன்ற நடவடிக்கைகள் தாமதமானவை.
அரசு ஆபத்தான சூழலுக்கு தேவையான திட்டங்களை தீட்டாததே இந்த நிலைக்கு காரணம். மேலும் தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனங்களுக்கு தேவையான ஆர்டர்களை அரசு மேற்கொள்ளவில்லை என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.