லக்னோ: முலாயம் சிங்கின் இளைய மருமகள் அபர்ணா யாதவ் புதன்கிழமை (ஜனவரி 19) தன்னை பாஜகவில் இணைத்துக்கொண்டார்.
இது குறித்து ஈடிவி பாரத்துக்கு அவர் அளித்த பிரத்யேகப் பேட்டியில், “பெண்கள் தன்னிறைவு பெற்றால் அவர்கள் மீதான குற்றங்களும் கட்டுப்படுத்தப்படும். பெண்களுக்கு 33 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியை வலியுறுத்துவேன்.
மற்ற அரசியல் கட்சிகளும் பெண்களுக்கான இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற முன்வர வேண்டும். மத்திய பாஜக அரசு பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவை நாடாளுமன்றத்தில் கொண்டுவர வேண்டும். தவிர, மற்ற அரசியல் கட்சிகளின் தலைவர்களும் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க முயற்சிக்க வேண்டும். இதன் மூலம் அரசியல் அமைப்பும் வலுப்பெறும்” என்றார்.
தொடர்ந்து அயோத்தி நிலம் கையகப்படுத்தப்பட்ட விவகாரம் குறித்து பேசுகையில், “அயோத்தியில் உள்ள கோயில் அறக்கட்டளை இதுபோன்ற செயல்களைக் கண்காணிக்க வேண்டும். இருந்தபோதிலும், இந்த விவகாரத்தில் உத்தரப் பிரதேச அரசு சரியான நடவடிக்கையை எடுத்துள்ளது.
அயோத்தியில் ஸ்ரீராமருக்கு கோயில் கட்டுவதற்கு ஏராளமானோர் நன்கொடை அளித்துள்ளனர். இந்த விவகாரம் நம்பிக்கை தொடர்பானது” என்று பதிலளித்தார். தொடர்ந்து அயோத்தி ராமர் கோயில், ஜம்மு காஷ்மீருக்கு அளிக்கப்பட்ட சிறப்புத் தகுதி ரத்து போன்ற விவகாரத்தில் நரேந்திர மோடியை வெகுவாகப் பாராட்டினார்.
அத்தியாவசிய பொருள்களின் விலையேற்றம் தொடர்பாகப் பேசிய அபர்ணா யாதவ், “இது கோவிட் தொற்றுநோயால் நடக்கிறது. ஆனால் டீசல், பெட்ரோல், சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலைகளைச் சரிபார்க்க வேண்டும்” என்றார்.
இதையும் படிங்க : கோவா ஆம் ஆத்மி முதலமைச்சர் வேட்பாளர் அறிவிப்பு!