மேற்கு வங்கம்: கோவாக்சின் தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பின் ஒப்புதலை பெற விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென பிரதமர் நரேந்திர மோடிக்கு மேற்கு வங்க முதலமைச்சர் கடிதம் எழுதியுள்ளார்.
இதுகுறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில், “பொதுமக்களுக்கு தடுப்பூசி போடும் பணிகளை மேற்கு வங்க அரசு மேற்கொண்டு வருகிறது. இதுவரை 2 கோடி டோஸ்களுக்கு மேற்பட்ட தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.
தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கியதில் இருந்து கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசிகள் வந்துகொண்டு இருக்கின்றன. தனியார் துறையும் இந்த தடுப்பூசிகளையே கொள்முதல் செய்து வருகின்றன.
எனினும், கோவாக்சின் தடுப்பூசிக்கு இதுவரை உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் அளிக்கவில்லை என தெரிகிறது. உலக சுகாதார அமைப்பால் ஒப்புதல் அளிக்கப்படாத தடுப்பூசிகளை போட்டவர்கள் வெளிநாடுகளுக்கு பயணிக்க முடியாது.
நாடு முழுவதும் ஏராளமான மாணவர்கள் உயர்கல்விக்காக வெளிநாடுகளுக்கு செல்கின்றனர். அவர்களில் ஏராளமானவர்கள் கோவாக்சின் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். கோவாக்சின் தடுப்பூசி சான்றிதழ் வெளிநாடுகளில் செல்லாது என தெரியவந்துள்ளதால் மாணவர்களின் கல்வியும், எதிர்காலமும் பாதிக்கப்பட்டுள்ளது.
எனவே, மாணவர்கள் இன்னல்களை சந்திக்காமல் இருக்க உடனடியாக குறுக்கிட்டு கோவாக்சின் தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பின் ஒப்புதலை பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனால் கல்வி, வேலை, தொழில் மற்றும் இதர தேவைகளுக்காக வெளிநாடுகளுக்கு செல்வோரும் பயன்பெறுவர்” என்று தெரிவித்துள்ளார்.