ஜம்மு காஷ்மீர்: ஜம்மு-காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் மாவட்டம் கோகர்நாக் பகுதியில் உள்ள காடோல் வனப்பகுதியில் பாதுகாப்புப் படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே இன்றும் (செப் 17) துப்பாக்கிச்சூடு நடந்தது. இந்த தாக்குதல் தொடர்ந்து ஐந்தாவது நாளாக நீடித்து வருகிறது. இந்த தாக்குதலால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் இருந்து வந்தனர்.
ஏற்கனவே அப்பகுதியிலுள்ள அனைத்துப் பள்ளிகளும் மூடப்பட்டிருந்த நிலையில், தற்போது அப்பகுதி மக்கள் அனைவரையும் பாதுகாப்பான இடத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். தொடர்ந்து, இந்த தாக்குதலை முடிவுக்கு கொண்டு வர உயர் அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
முன்னதாக கடந்த புதன்கிழமை, கோகர்நாக் கடோல் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின்பேரில் பாதுகாப்புப் படை வீரர்கள் சம்பவ இடத்திற்குச் சென்றனர். அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படை வீரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில், கமாண்டிங் அதிகாரி கர்னல் மன்பிரீத் சிங் சுட்டுக் கொல்லப்பட்டார்.
19 ராஷ்டிரிய ரைபிள்ஸ், மேஜர் ஆஷிஷ் டோன்சக் மற்றும் ஜம்மு காஷ்மீர் துணைக் கண்காணிப்பாளர் ஹுமாயுன் பட் ஆகியோரும் கொல்லப்பட்டனர். இதனைத் தொடர்ந்து, நேற்றைய முன்தினம் நடந்த தாக்குதலில் மற்றொரு பாதுகாப்புப் படை வீரர் காயமடைந்தார்.
பயங்கரவாதிகள் பொதுமக்கள் வசிக்கும் இடங்களுக்குள் செல்லாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அருகே உள்ள போஷ் க்ரீரி பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர். தொடர்ந்து, வடக்கு ராணுவத் தளபதி சனிக்கிழமையன்று துப்பாக்கிச் சூடு நடந்த இடத்திற்குச் சென்று நிலைமையை ஆய்வு செய்தார்.
லெப்டினன்ட் ஜெனரல் த்விவேதிக்கு தரைப்படைத் தளபதிகள், உயர் தீவிர செயல்பாடுகள் குறித்து விளக்கமளித்தனர். இதில் ஹைடெக் கருவிகள் கண்காணிப்பு மற்றும் ஃபயர்பவரை வழங்குவதற்குப் பயன்படுத்தப்படுவது குறித்து விளக்கமளிக்கபப்ட்டது. பயங்கரவாதிகளை கண்காணிக்கவும் பயன்படுத்தப்பட்ட ஆளில்லா விமானத்தை வடக்கு ராணுவத் தளபதி ஆய்வு செய்தார்.
இந்நிலையில், பந்திபோரா என்னும் இடத்தில் 14 ராஷ்ட்ரிய ரைஃபெல்ஸ் கேம்ப்பில் உள்ள ராணுவ வீரர் இன்று உயிரிழந்தார். எதிர்பாராத விதமாக நடந்த துபாக்கிச்சூட்டில் 40 வயதான விபின் பாட்யா உயிரிழந்தார். மேலும், 37 வயதான யோகேஷ் என்பவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தொடர்ந்து, இச்சம்பவம் குறித்து குற்றம் சாட்டப்பட்ட ராணுவ வீரர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: ஜம்மு-காஷ்மீர் பயங்கராவாத தாக்குதலில் மூன்றாம் தலைமுறை ராணுவ வீரர் கர்னல் மன்பிரீத் சிங் மரணம்!