ஆந்திர மாநிலம் எலுரு பகுதியில் பரவும் புதிய நோய்க்கு காரணம் உணவு மற்றும் குடிநீரிலிருக்கும் பூச்சிக்கொல்லிகளின் எச்சம்தான் என பல கட்ட ஆய்வுக்கு பிறகு நிபணர்கள் கூறுகின்றனர். டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை மற்றும் இந்திய வேதியியல் தொழில்நுட்ப நிறுவனம் நடத்திய சோதனையிலும் புதிய நோய்க்கு காரணம் பூச்சிக்கொல்லிகளின் எச்சம்தான் என தெரியவந்தது. இதுகுறித்து முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு தெரிவிக்கப்பட்டது.
நோய்க்கு காரணம் என்ன தெரியுமா?
இதனைத் தொடர்ந்து, வீடியோ கான்பரன்சிங் மூலம் இந்திய மருத்துவ தொழில்நுட்ப ஆராய்ச்சி கழகத்தின் அலுவலர்களிடம் ஜெகன் ஆலோசனை நடத்தினார். மாநில சுகாதாரத்துறை அமைச்சர் அல்லா நானி, உள்ளாட்சிதுறை அமைச்சர் போட்சா சத்தியநாராயணா, தலைமைச் செயலாளர் நீலம் சாஹனி, நீர்வளம், உள்ளாட்சி, வேளாண் ஆகிய துறைகளின் செயலாளர்கள், மாவட்ட ஆட்சியர் முத்யாலா ராஜூ ஆகியோரும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
தேசிய ஊட்டச்சத்து நிறுவனம், இந்திய வேதியியல் தொழில்நுட்ப நிறுவனம், டெல்லி எய்ம்ஸ், தேசிய தொற்று நோய்கள் தடுப்பு நிறுவனம், தேசிய கிருமியியல் நிறுவனம் உள்ளிட்டவை புதிய நோய் குறித்து தாங்கள் மேற்கொண்ட ஆய்வறிக்கைகளை கூட்டத்தில் சமர்பித்தன.
நோயாளிகளின் ரத்தத்தில் ஈயம் துகள்கள்
நோயாளிகளின் ரத்த மாதிரியில் ஈயம் துகள்கள் இருப்பதை டெல்லி எய்ம்ஸ் மருத்துவ நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர். அதன் காரணமாகவே, அவர்கள் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மருத்துவர்கள் கூறுகின்றனர். பால் மாதிரியில் நிக்கல் துகள்கள் இருப்பதையும் அவர் கண்டறிந்துள்ளனர்.
பழங்கள் மற்றும் காய்கறிகளில் தெளிக்கப்பட்ட பூச்சிக்கொல்லிகளில் உள்ள ஆர்கானிக் குளோரைடு (organic chloride) காரணமாக மக்கள் நோய்வாய்ப்பட்டிருக்கலாம் என்று தேசிய ஆராய்ச்சி நிறுவனத்தின் வல்லுநர்கள் சந்தேகிக்கின்றனர். காய்கறிகள், குடிநீர், உணவு பொருள்கள் ஆகியவற்றை ஆய்வு செய்வதன் மூலமாக நோய் காரணத்தை கண்டறியலாம். வாழ்க்கை முறை காரணமாக அவர்கள் நோய்வாய்ப்பட்டிருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி, நோயாளிகளின் உறவினர்களின் உடல்களிலிருந்து நிக்கல் துகள்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
எலுரு பகுதி மக்கள் உட்கொள்ளும் குடிநீர் மற்றும் சுவாசிக்கும் வாயு ஆகியவை சுத்தமாக இருப்பது தெளிவாகியுள்ளது. ஆனால், அப்பகுதியில் உள்ள மேற்பரப்பு நீரில் அளவுக்கு மீறிய பாதரசம் இருப்பதை தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம் கண்டறிந்துள்ளது. அதில், ஆர்கானோ குளோரின், ஆர்கானோ பாஸ்பேட், ஈயம் ஆகியவற்றின் துகள்களும் கண்டறியப்படவில்லை என நிபுணர்கள் கூறுகின்றனர்.
காய்கறிகளில் தென்பட்ட பூச்சிக்கொல்லியின் எச்சம்
மண்ணின் மாதிரிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. மாதிரிகளில் அளவுக்கு மீறிய வைரஸ், பாக்டீரியா ஆகியவை தென்படவிலில்லை என உயிரணு மற்றும் மூலக்கூறு உயிரியல் மையம் தெரிவித்துள்ளது. புதிய நோயால் பாதிக்கப்பட்டவர்களின் சிறுநீர் மாதிரியில் வைரஸ் தொற்று ஏற்படவில்லை என புனேவில் உள்ள தேசிய கிருமியியல் மையம் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க வேண்டும்
புதிய நோயை கருத்தில் கொண்டு எதிர்காலத்தில் இம்மாதிரியான பிரச்னைகளை எதிர்கொள்ள திட்டம் வகுக்க ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார். அனைத்து மாவட்டங்களிலும் பொது சுகாதார ஆய்வகங்களை அமைக்க வேண்டும் என்றும் தக்க சமயங்களில் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மூன்று பகுதிகளில் மூன்று ஆய்வகங்களை அமைக்க உத்தரவிட்டதை தவிர்த்து மாதிரிகளை பரிசோதித்து இம்மாதிரியான பிரச்னைகளை தவிர்க்கவும் அவர் அறிவுறுத்தியுள்ளார். அதுமட்டுமின்றி, விவசாயிகளிடையே இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க விழிப்புணர்வு மேற்கொள்ள வேண்டும் என ஜெகன் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ஓஎல்எக்ஸில் விற்பனைக்கு வந்த மோடியின் அலுவலகம்