மும்பை: மாவோயிஸ்டுகளுடன் தொடர்பு வைத்திருந்ததாக கைது செய்யப்பட்டு மகாராஷ்டிரா மாநிலம் தலோஜா சிறையில் உள்ளவர் சமூக செயற்பட்டாளர் ஸ்டேன் சுவாமி. அவரை மருத்துவ சிகிச்சைக்காக மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்றுமாறு மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த அக்டோபர் மாதம் கைது செய்யப்பட்ட ஸ்டேன் சுவாமி, தலோஜா சிறையில் உள்ள மருத்துவமனையில் அடைக்கப்பட்டுள்ளார். முன்னதாக, அவருடைய உடல்நிலையைக் கருத்தில் கொண்டு இடைக்கால பிணை வழங்கவேண்டும் என அவரது வழக்கறிஞர் மனுதாக்கல் செய்திருந்தார்.
அந்த மனு மீதான விசாரணையின்போது, மருத்துவ சிகிச்சைக்காக பிணையில் விடுவது தொடர்பாக நீதிமன்றம் பின்னர் முடிவு எடுக்கும் என நீதிபதிகள் கூறியதோடு, ஜே.ஜே மருத்துவமனைக்கு அவரை மாற்ற உத்தரவிட்டனர். அந்த மருத்துவமனையில் அனுமதியாக மறுத்த அவர், இரண்டு மூன்று முறை அந்த மருத்துவமனைக்குச் சென்றுள்ளதாகவும், அங்கு சென்றபின்பு எனது உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை எனவும் காணொலி வாயிலாக முன்னிலையான போது நீதிபதிகளிடம் தெரிவித்தார்.
அவரை ஒப்புக்கொள்ளவைக்கவும், அவரிடம் இதுகுறித்துப் பேசவும் அவரது வழக்கறிஞர் கால அவகாசம் கேட்டார். ஆனால் , அதற்கு தேசியப் புலனாய்வு முகமையின் ஆலோசகர், அரசு தரப்பு வழக்கறிஞர் உள்ளிட்டோர் எதிர்த்தனர். இருப்பினும், நீதிமன்றம் கால அவகாசம் வழங்கியநிலையில், இன்று ஹோலி ஃபேமிலி மருத்துவமனையில் அனுமதியாக ஸ்டேன் சுவாமி ஒப்புக்கொண்டுள்ளார். மருத்துவச் செலவுகளை ஸ்டேன் சுவாமியின் குடும்பத்தினர் ஏற்பதாக கூறியபின்பே இந்த உத்தரவை நீதிமன்றம் பிறப்பித்தது.
இதையும் படிங்க: கரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு இலவச கல்வி, மாத உதவித் தொகை - பினராயி விஜயன் அறிவிப்பு