புதுச்சேரி சட்டப்பேரவைக்கான தேர்தல் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. காங்கிரஸ்-திமுக கூட்டணியும், என்.ஆர்.காங்கிரஸ்-பாஜக-அதிமுக கூட்டணியும் நேரடியாக மோதுகின்றன.
வாக்குப்பதிவுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், ஜனநாயக சீர்திருத்த சங்கமும், தேசியத் தேர்தல் கண்காணிப்பு அமைப்பும் இணைந்து வேட்பாளர்களின் பின்னணி குறித்த ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளன.
அதில் புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் 323 வேட்பாளர்களின் பின்னணி ஆய்வு செய்யப்பட்டு அதன் முக்கிய விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
குற்றப் பின்னணி
ஆய்வு செய்யப்பட்ட 232 வேட்பாளர்களில் 54 பேர் மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. கடுமையான கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ள வேட்பாளர் எண்ணிக்கை 2016இல் 30 ஆக இருந்த நிலையில் 2021இல் அது 28ஆக குறைந்துள்ளது.
அதிக குற்றப் பின்னணி கொண்ட வேட்பாளர்கள்
சராசரியாக அதிக குற்றப்பின்னணி கொண்ட வேட்பாளர்களில் அதிமுகவினர் இடம் பிடித்துள்ளனர். அக்கட்சியில் ஐந்து வேட்பாளர்களில் மூவர் (60%) மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன.
அதற்கு அடுத்தபடியாக பாஜகவின் ஒன்பது வேட்பாளர்களில் ஐந்து (56%) பேர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன.
மூன்றாவதாக திமுகவின் 13 வேட்பாளர்களில் ஏழு (54%) பேர் மீது கிரிமினல் வழக்கு உள்ளன.
இந்த மூன்று கட்சிகளை ஒப்பிடும்போது காங்கிரஸ் மற்றும் என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர்கள் சராசரி அளவில் குறைந்த குற்றப்பின்னணி கொண்டவர்களாக உள்ளனர்.
காங்கிரசின் 14 வேட்பாளர்களில் நான்கு (29%) பேர் மீதும், என்.ஆர். காங்கிரசின் 16 வேட்பாளர்களில் மூன்று (19%) மீதும் கிரிமினல் வழக்குகள் உள்ளன.
பொருளாதாரப் பின்னணி
323 வேட்பாளர்களில் 74 பேர்(23%) கோடீஸ்வரர்கள். 2016இல் 343 பேர் களம் கண்ட நிலையில் அதில் 96 பேர் ( 28%) கோடீஸ்வரர்களாக இருந்தார்கள்.
சராசரியாக அதிகபட்சமாக பாஜகவில் 89 விழுக்காட்டினர் கோடீஸ்வரர்களாக உள்ளனர். அதற்கு அடுத்தபடியாக, காங்கிரசில் 86 விழுக்காட்டினர், என்.ஆர். காங்கிரசில் 81 விழுக்காட்டினர், அதிமுகவில் 80 விழுக்காட்டினர், திமுகவில் 69 விழுக்காட்டினர் கோடீஸ்வர்களாக உள்ளனர்.
புதுச்சேரி வேட்பாளர்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ.2.14 கோடியாகக் கணக்கிடப்பட்டுள்ளது.
உருளையன்பேட்டை சுயேச்சை வேட்பாளர் ஜி. நேரு என்கிற குப்புசாமி ரூ.43 கோடி சொத்து மதிப்புடன் முதலிடத்தில் உள்ளார்.
கல்விப் பின்னணி
- பட்டப்படிப்பு அதற்கு மேல் முடித்தவர்கள் - 133 பேர்
- 5 முதல் 12ஆம் வகுப்பு வரை படித்தவர்கள் - 162 பேர்
- டிப்ளமோ படித்தவர்கள் - 18 பேர்
வயது
- 25 முதல் 40 வயது - 109 பேர்
- 41 முதல் 61 வயது - 175 பேர்
- 61 வயதுக்கும் மேற்பட்டோர் - 39 பேர்
2016ஆம் ஆண்டு தேர்தலில் 26(6%) பெண் வேட்பாளர்கள் களமிறங்கிய நிலையில் இம்முறை அது 36(11%)ஆக அதிகரித்துள்ளது.
இதையும் படிங்க: தேர்தல் 2021: உறவுக்குக் கை கொடுத்து, உரிமைக்குக் குரல் கொடுத்த கதை