கண்ணூர்: தமிழ்நாட்டை சேர்ந்த பத்மராஜன் நாட்டின் தேர்தல் மன்னன் என்று அழைக்கப்படுகிறார். இவர் ஏற்கனவே பிரதமர் நரேந்திர மோடி, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி ஆகியோரையும் எதிர்த்து போட்டியிட்டுள்ளார்.
தமிழ்நாட்டிலிலுள்ள சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர் பத்மராஜன். டயர் விற்பனையாளரான இவர் நாட்டில் நடந்த முக்கிய தேர்தல்களில் போட்டியிட்டு தோல்வியுற்றவர் என்ற அடிப்படையில் லிம்கா சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார். இதுவரை 200க்கும் மேற்பட்ட தேர்தல்களில் போட்டியிட்டு தோல்வியை தழுவியுள்ளார்.
இவருக்கு தமிழ் தவிர மலையாள மொழியும் நன்கு பேசத்தெரியும். இந்நிலையில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயனை எதிர்த்து அவர் போட்டியிடும் தர்மடம் தொகுதியில் களம் காண்கிறார். இது பத்மராஜனுக்கு 217ஆவது தேர்தல் ஆகும்.
பத்மராஜன் தனது தேர்தல் பயணத்தை 1988ஆம் ஆண்டு தொடங்கினார். முதல் முதலாக சேலம் மேட்டூர் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்டார். அதன்பின்னர் தற்போதுவரை தேர்தல்களில் தொடர்ந்து போட்டியிட்டுவருகிறார்.
இந்தியத் தேர்தல்களில் அதிக முறை தோற்கடிக்கப்பட்டவர் என்ற அரிதான சாதனையும் இவரிடம் உள்ளது. இதற்காகவே லிம்கா புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார். இதுவரை தேர்தல்களில் ரூ.50 லட்சம் வரை செலவு செய்துள்ளார்.
எனினும் மனம் தளராமல் தேர்தல்களில் தொடர்ந்து போட்டியிட்டுவருகிறார். இவரின் நோக்கம் இந்தியத் தேர்தல்களில் சாதாரண மனிதரும் போட்டியிட முடியும் என்பதை முன்னிலைப்படுத்துவதே ஆகும்.
பத்மராஜன் 2014ஆம் ஆண்டு குஜராத்தின் வதோதராவில் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது இவர் சர்வதேச அளவில் கவனம் பெற்றார். தொடர்ந்து ராகுல் காந்திக்கு எதிராக வயநாட்டில் போட்டியிட்டார். அதிலும் அவருக்கு தோல்வியை மிஞ்சியது.
இந்நிலையில் கேரளத்தில் முதலமைச்சரை எதிர்த்து போட்டியிடுவது குறித்து பத்மராஜன் கூறுகையில், “நான் கேரளத்தில் எவ்வளவு நாள்கள் தங்கியிருந்து பரப்புரை மேற்கொள்வேன் எனத் தெரியவில்லை. தமிழ்நாட்டிலும் நான்கு வேட்புமனுக்கல் தாக்கல் செய்யப்பட வேண்டும். அதற்கு நேரமில்லை” என்றார்.
இதையும் படிங்க: மே 2 மம்தா ஆட்சி முடிவுக்கு வரும்- யோகி ஆதித்யநாத்!