டெல்லி : கர்நாடகாவில் பிரிவினைவாதத்தைத் தூண்டும் வகையில் காங்கிரஸ் கட்சி சமூக வலைதளத்தில் கருத்து வெளியிட்டது தொடர்பாக பாஜகவினர் புகார் அளித்த நிலையில், அது குறித்து விளக்கம் அளிக்குமாறு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு இந்தியத் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
224 தொகுதிகளை கர்நாடக சட்டமன்றத்திற்கு, வரும் மே 10ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் பிரசாரம் நிறைவடைந்த நிலையில், கடைசி கட்ட அதிதீவிர பிரசாரத்தில் காங்கிரஸ் மற்றும் பாஜக உள்ளிட்ட கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டன.
கடந்த சனிக்கிழமை (மே. 6) நடைபெற்ற கர்நாடக சட்டப் பேரவை தேர்தல் பிரசாரக் கூட்டத்தில், கலந்து கொண்டு பேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, "கர்நாடகத்தின் நற்பெயருக்கும், இறையாண்மைக்கும், ஒருமைப்பாட்டுக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்த நினைக்கும் யாரையும் காங்கிரஸ் அனுமதிக்காது"எனக் கூறியதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அதேபோல் காங்கிரஸ் கட்சியின் ட்விட்டர் பக்கத்தில், சோனியா காந்தி பேசியது குறித்த பதிவு வெளியானது. இந்த நிலையில் சோனியா காந்தியின் கருத்து நாட்டில் பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் இருப்பதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் பாஜகவினர் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தனர்.
தேர்தல் விதிமீறல்களில் ஈடுபட்டதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்றும் பாஜகவினர் கோரிக்கை விடுத்தனர். இது தொடர்பாக பேசிய மத்திய அமைச்சர் பூபேந்திர யாதவ், காங்கிரஸின் தேர்தல் அறிக்கையில் மக்களுக்கு பயன் அளிக்கும் வகையில் ஒன்றுமில்லை என்பதால், பிரதமர் மோடிக்கு எதிரான பிரசாரத்தை கையில் எடுத்து உள்ளதாகவும் அதற்காக இத்தகைய வார்த்தைகளைப் பயன்படுத்துவதாகவும் கூறினார்.
மேலும், சோனியா காந்தியின் கருத்து தேச விரோதச் செயல் என்றும்; தேர்தல் ஆணையம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். சோனியா காந்தியின் கருத்து மக்களை பிளவுபடுத்தும் வகையிலும், வெவ்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு இடையே பிளவை உண்டாக்கும் நோக்கத்தையும் கொண்டுள்ளதாக அவர் கூறினார்.
இந்தியாவின் ஒரு பகுதியே கர்நாடகம் என்றும், நாட்டை விட்டு கர்நாடகாவை பிரிக்க காங்கிரஸ் திட்டமிடுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார். மேலும் சோனியா காந்தி வெளியிட்ட கருத்துகள் காங்கிரஸ் கட்சியின் சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிடப்பட்டு உள்ளதாகவும்; அது தொடர்பாகவும் நடவடிக்கை எடுக்கக் கோரி பாஜகவினர் இந்தியத் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தனர்.
இந்நிலையில் கர்நாடக இறையாண்மை குறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனிய காந்தியின் கருத்துக்கு, காங்கிரஸ் கட்சியின் ட்விட்டர் பக்கத்தில் வெளியான பதிவுக்கும் விளக்கம் தருமாறு அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு இந்தியத் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
இதையும் படிங்க : மேற்கு வங்கத்தில் "தி கேரளா ஸ்டோரி" படம் திரையிடத் தடை - மாநில அரசு உத்தரவு!