நாட்டில் கரோனா பாதிப்புகளைக் கட்டுப்படுத்த அவசரகாலத் தேவைக்காகக் கரோனா தடுப்பூசிகளைச் செலுத்திக்கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியது.
ஜன. 16 கரோனா தடுப்பூசி
இதனைத் தொடர்ந்து, கடந்த ஜனவரி 16ஆம் தேதிமுதல் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கின. இதனை, பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்தார்.
முதல்கட்டமாகச் சுகாதாரப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
9 கோடி கரோனா தடுப்பூசி
தற்போது கரோனா பரவல் தீவிர அலையாகப் பரவிவரும் நிலையில், நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இதுவரை நாடு முழுவதும் ஒன்பது கோடியே ஒரு லட்சத்து 98 ஆயிரத்து 673 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
பிரதமர் கடந்த மார்ச் 1ஆம் தேதி கரோனா தடுப்பூசியின் (பாரத் பயோடெக்கின் கோவாக்சின்) முதல் டோஸை எடுத்துக்கொண்டார். அப்போது, அவருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தியது புதுச்சேரியைச் சேர்ந்த செவிலி பி. நிவேதா.
பிரதமருக்கு 2ஆம் டோஸ்
இந்த நிலையில் நரேந்திர மோடி இன்று (ஏப்ரல் 8) டெல்லியிலுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் இரண்டாம் டோஸை எடுத்துக்கொண்டார். பஞ்சாபின் சங்ரூர் பகுதியைச் சேர்ந்த செவிலி சர்மா, நரேந்திர மோடிக்கு கரோனா தடுப்பூசியின் இரண்டாம் டோஸை செலுத்தினார்.
அப்போது அவருக்கு உதவியாக மோடிக்கு முதல் டோஸ் செலுத்திய பி. நிவேதா உடனிருந்தார். இது குறித்து நிவேதா, "நான்தான் பாரதப் பிரதமருக்கு கரோனா தடுப்பூசியின் முதல் டோஸை செலுத்தினேன்.
இரண்டாவது முறையாக பிரதமருக்குத் தடுப்பூசி செலுத்தும்போது, அவரைச் சந்திப்பதற்கான மற்றொரு வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. இது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது" என்று கூறுகையில் அவரது முகத்தில் இழையோடியது உற்சாகம்!
மோடியுடன் செவிலியர் புகைப்படம்
மேலும், பிரதமர் எங்களுடன் பேசினார், அப்போது அவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
நரேந்திர மோடிக்கு இன்று இரண்டாம் டோஸ் தடுப்பூசி செலுத்திய பஞ்சாபைச் சேர்ந்த செவிலி சர்மா, "நான் கடந்த ஓராண்டாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் செவிலியாகப் பணியாற்றிவருகிறேன். தற்போது நான் எய்ம்ஸ் மருத்துவமனையின் தடுப்பூசி மையத்தில் பணியமர்த்தப்பட்டுள்ளேன்.
மறக்க முடியாத தருணம்
பாரத் பயோடெக்கால் தயாரிக்கப்பட்ட தடுப்பூசியின் இரண்டாம் டோஸை பிரதமர் நரேந்திர மோடிக்கு இன்று செலுத்தியுள்ளேன். இது எனக்கு மிகவும் மறக்க முடியாத தருணம்" எனக் கூறி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
இதையும் படிங்க: 2ஆம் டோஸ் கரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்ட பிரதமர்