ராய்ப்பூர்: இஸ்லாமியர்களால் ஈகை நாளாக கொண்டாடப்படும் பக்ரீத் நாளில் ஆடு, மாடுகளை பலியிட்டு, தங்களின் நண்பர்கள் மற்றும் இல்லாதவர்களுக்கு பகிர்ந்து உண்பது வழக்கம். அனைத்து இஸ்லாமியர்களும் ஒரே நாளில் விலங்குகளை வாங்குவதால் பக்ரீத் நாளில் விலை உயர்வும் மிகச்சாதாரணமாக காணப்படுகிறது.
நாளை (ஜூலை 10) பக்ரீத் கொண்டாடப்படுவதையொட்டி சத்தீஷ்கர் மாநிலத்தில் உள்ள ராய்ப்பூர் சந்தையும் பக்ரீத் உற்சாகத்துடன் விறுவிறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. ஆனால் இந்த சந்தையில் ஒரே ஒரு ஆட்டுக்கு 70 லட்ச ரூபாய் விலை நிர்ணயம் செய்யப்பட்டது தான் பேசு பொருளாகியுள்ளது.
அப்படி என்ன அந்த ஆட்டில் விசேஷம் என்று மத்திய பிரதேசத்திலிருந்து அந்த ஆட்டை கொண்டு வந்திருந்த அதன் உரிமையாளர் வாகித் உசேன் விவரித்தார். இந்த ஆடு கலப்பில்லாத ஆடு இனத்தை சேர்ந்தது, இது இயற்கையின் கொடை என கூறும் வாகித் ஆட்டின் உடலில் உள்ள வண்ணங்களில் உருது எழுத்துக்கள் போன்ற தோற்றம் உள்ளதை குறிப்பிட்டு காட்டுகிறார்.
உருது எழுத்து போன்ற தோற்றத்தால் இந்த ஆடு புனிதமானது என நம்பும் இஸ்லாமியர்கள் இதனை வாங்க போட்டி போடுவார்கள் என வாகித் நம்புகிறார். மத்தியப் பிரதேசத்திலிருந்தே ஆட்டின் புகழைக் கூறும் டிஜிட்டல் பேனர்களுடன் கிளம்பிய அவர் ராய்ப்பூர் சந்தையில் தான் விரும்பும் விலை கிடைத்தால் மட்டுமே விற்பது என பிடிவாதத்துடன் காத்திருக்கிறார்.
தனது ஆட்டுக்கான விலையை கொடுக்க ராய்ப்பூர் சந்தையிலேயே ஆட்கள் இல்லை என கூறும் வாகித் , நாக்பூரிலிருந்து ஒருவர் தொடர்பு கொண்டு 22 லட்ச ரூபாய் தருவதாக பேசியதாகவும் கூறினார். தொலைபேசி மூலம் பேரம் பேசப்பட்டும் விலை படியவில்லை என கூறும் அவர் முகநூலிலும் ஆட்டின் பெருமையை பகிர்ந்து சரியான விலைக்காக காத்திருக்கிறார்.
ஆடுகளை விற்பதையே தொழிலாக கொண்டிருக்கும் வாகித் தனது பொருளாதார சூழல் சரியில்லை என்றும் 3 பெண் குழந்தைகளும், 3 ஆண்குழந்தைகளும் தனக்கு இருப்பதாகவும், ஆட்டுக்கு சரியான விலை கிடைத்தால் அதில் கிடைக்கும் பணத்தில் மகள்களுக்கு திருமணம் செய்து வைக்க திட்டமிட்டுள்ளேன் என கூறுகிறார்.
ராய்ப்பூர் மட்டும் ஆடுகளுக்கு கிராக்கி மிக்க சந்தை அல்ல மத்திய பிரதேசத்தின் மால்வாவில் உள்ள சந்தையில் ஆடு ஒன்று 11 லட்ச ரூபாய்க்கு விற்பனைக்கு வந்துள்ளது. சுல்தான் என பெயரிடப்பட்ட இந்த ஆட்டின் மீது நபிகள் நாயகமே உருது எழுத்தில் எழுதியிருக்கிறார் என அதன் உரிமையாளரான ஷாருக்கான் என்பவர் நம்புகிறார். 60 கிலோ எடையில் இருக்கும் சுல்தானுக்கு தினந்தோறும், முந்திரியும் பாதாமும் கொடுத்து வளர்த்து வருவதாக அவர் கூறுகிறார்.
நாடு முழுவதுமே கால்நடை சந்தைகளில், இது போன்ற உருவங்களை உடலில் கொண்ட ஆடுகளுக்கு கடுமையான கிராக்கி உள்ளது. லட்சங்களை கொட்டிக் கொடுத்தாலும், அதன் உரிமையாளர்கள் அவற்றை விற்க முன்வருவதில்லை. ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் சந்தையில் முதுகில் பிறை வடிவம் கொண்ட ஆடுகள், உருது எழுத்துக்கள் போன்று தோற்றமுடைய ஆடுகளுக்கு ஏக கிராக்கி உள்ளது.
சமூகவலைத் தளங்களிலும் இது போன்று குறியீடு உடைய ஆடுகள் ஸ்டார் ஆகிவிடுகின்றன. வாங்கவில்லை என்றாலும் சந்தைகளில் இவற்றுடன் செல்பி எடுத்துக் கொள்ள முண்டியடிக்கும் கூட்டம் அதிகமாக உள்ளது.