புதுடெல்லி: ஆந்திரப் பிரதேசத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 2020 ஆம் ஆண்டில் அரசாங்கத் திட்டங்களைப் பிரச்சாரம் செய்யவும், அரசாங்கத் திட்டங்களைப் பெறுவதற்கும், பொதுமக்களுக்கு உதவும் வண்ணம் ஒவ்வொரு 50 வீடுகளுக்கும் தலா 1 தன்னார்வலர் வீதம் 2.56 லட்சம் தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டனர்.
இதைத் தொடர்ந்து ஜூன் 2022 ஆம் ஆண்டில், ஆந்திரப் பிரதேச அரசு 2.56 லட்சம் கிராம / வார்டு தன்னார்வலர்களுக்கு மாநில நிதியில் இருந்து தலா ரூ.200 கூடுதல் நிதியாக அறிவித்தது. அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் தற்காலப் பிரச்சனைகள் பற்றிய கூடுதல் அறிவையும் விழிப்புணர்வையும் பெறுவதற்கு பரவலாக விநியோகிக்கப்படும் தெலுங்கு செய்தித்தாளை வாங்குவதற்கு அவர்களுக்கு உதவுவதற்காக இந்த கூடுதல் தொகை வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
மேலும் டிசம்பர் 2022-ஆம் ஆண்டு 1.45 லட்சம் கிராம / வார்டு தன்னார்வலர்களுக்கு ரூ.200 வழங்குவதற்கான மற்றொரு அரசு ஆணை நிறைவேற்றப்பட்டது. பின்னர் 2023 பிப்ரவரியில் அமராவதியில் உள்ள ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றத்தில் 2 அரசு ஆணைகளை எதிர்த்து ஈநாடு பத்திரிக்கை வழக்கு தொடுத்தது. அதில், அரசு ஆணையில் குறிப்பாக "சாக்ஷி" என்ற பத்திரிக்கையின் பெயரைக் குறிப்பிடவில்லை என்றாலும் கூட, அந்த பத்திரிக்கையை வாங்க வைக்கும் வகையில் அரசு ஆணைகளில் பல்வேறு நிபந்தனைகள் போடப்பட்டது.
மேலும் முதலமைச்சரும், மற்ற அமைச்சர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளும் "ஈநாடு" பத்திரிக்கையை மஞ்சள் ஊடகம் என விமர்சித்தனர். அதுமட்டுமின்றி ஈநாடு பத்திரிக்கையை யாரும் படிக்க வேண்டாம் என்றனர். இதனால் சாக்ஷியை வாங்குவது தொண்டர்களின் வெளிப்படையான தேர்வாக இருந்தது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
அதன் பின்னர் இந்த விவகாரம் ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றத்தின் டிவிஷன் பெஞ்சால் விசாரிக்கப்பட்டது. இது தலைமை நீதிபதி தலைமையிலான ஒரு இடைக்கால உத்தரவை பிறப்பிக்க மறுத்து, 2020 ஆம் ஆண்டின் தாக்கல் செய்யப்பட்ட மற்றொரு பொதுநல மனுவுடன் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதையடுத்து ஈநாடு பத்திரிக்கை உச்ச நீதிமன்றத்தில் சிறப்பு இடையீட்டு மனுவை தாக்கல் செய்தது. அதன் பின்னர் மார்ச் 29-ஆம் தேதி, எதிர் மனுதாரர்களுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் வழங்க உத்தரவிட்டது. பின்னர் ஏப்ரல்-9 ஆம் தேதி எதிர் மனுதாரர்கள் உச்ச நீதிமன்றத்தில் ஆஜராகினர். அவர்கள் சார்பாக மூத்த வழக்கறிஞர்கள் ஸ்ரீ சிஎஸ் வைத்தியநாதன், ஸ்ரீ ரஞ்சித் குமார் ஆகியோர் ஆஜராகினர்.
அப்போது இந்த தன்னார்வத் தொண்டர்கள் யார், அவர்கள் எப்படி நியமிக்கப்படுகிறார்கள் என்று பதில் மனுதாரரிடம் நீதிமன்றம் கேட்டது. அதற்கு மனுதாரர் மூத்த வழக்கறிஞர் மயங்க் ஜெயின் உதவி வழக்கறிஞர்கள் எஸ்.முகுல் ரோஹத்கி மற்றும் தேவ்தத் காமத் ஆகியோர், அவர்கள் அரசியல் நிகழ்ச்சி நிரலுக்காக உழைக்கும் கட்சிக்காரர்கள் தன்னார்வத் தொண்டர்களாக நியமிக்கப்படுவதாகத் தெரிவித்தனர்.
அப்போது நீதிமன்றம் கூறியதாவது, “இந்த விவகாரம் உயர் நீதிமன்றத்தில் இவ்வாறு கையாளப்பட்டது மிகவும் கவலையளிக்கிறது. எனவே, ரிட் மனுவை டெல்லி உயர் நீதிமன்றத்தின் டிவிஷன் பெஞ்சிற்கு மாற்றலாம் எனவும், அவர்கள் இந்த விஷயத்தை இறுதியாக பரிசீலிக்கட்டும்" எனவும் தெரிவித்தது.
ரிட் மனுவை டெல்லி உயர் நீதிமன்றத்திற்கு மாற்றுவதற்கு, பிரதிவாதிகள் தரப்பில் ஆஜரான சி.எஸ். வைத்தியநாதன் ஆட்சேபம் தெரிவித்தார். இந்த வழக்கு இம்மாதம் 21 ஆம் தேதி விசாரணைக்கு வர உள்ளதாகவும், எனவே இந்த நிலையில் வழக்கை டெல்லி உயர் நீதிமன்றத்துக்கு மாற்றுவது தேவையில்லாமல் காலதாமதமாகும் என்றும் அவர் கூறினார்.
பின்னர் முகுல் ரோஹத்கி, உஷோதயாவின் ரிட் மனுவை, பொதுநல மனுவுடன் சேர்த்து விசாரிக்க முடியாது என்றும், இந்த விவகாரத்தை டெல்லி உயர் நீதிமன்றத்திற்கு மாற்றுவது பொருத்தமானது என்றும் கூறினார். இந்த நிலையில், சிஎஸ் வைத்தியநாதன் தனது கட்சிக்காரரிடம் இருந்து அறிவுறுத்தல்களைப் பெற வெள்ளிக்கிழமை வரை அவகாசம் கோரினார்.
நீதிமன்றமானது, அந்த அரசு ஆணைகள் மற்றும் பிரதிவாதியின் வழக்கறிஞர், அறிவுறுத்தல்களை எடுப்பதற்கு கால அவகாசம் எடுத்த அனைத்து நடவடிக்கைகளையும் நிறுத்தி வைப்போம். மேலும் இந்த வழக்கு வருகிற ஏப்.17 ஆம் தேதியன்று மறு விசாரணைக்கு வரவுள்ளது எனவும் தெரிவித்தது.
இதையும் படிங்க: நீதி நிர்வாகம் பற்றிய புதிய அறிவிப்புகளை பேரவையில் அமைச்சர் ரகுபதி வெளியிடூ!