டெல்லி: நாட்டில் கரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள ஐந்து மாநிலங்களில் பேரணி, பொதுக் கூட்டங்களுக்கு அனுமதி அளிப்பது குறித்து ஒன்றிய சுகாதாரத்துறை செயலாளர், மாநில சுகாதாரத்துறை, அரசு தலைமை செயலாளர்களுடன் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா காணொளி வாயிலாக இன்று (ஜன.31) காலை 11 மணி அளவில் ஆலோசனை மேற்கொள்கிறார்.
உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் பிப்ரவரி 10ஆம் தேதி முதல் மார்ச் 7ஆம் தேதி வரை சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. மார்ச் 10ஆம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
முன்னதாக கரோனா பரவல் காரணமாக இந்த ஐந்து மாநிலங்களில் பேரணி, பொதுக் கூட்டங்களை நடத்த இந்திய தேர்தல் ஆணையம் ஜன.31ஆம் தேதி வரை தடை விதித்துள்ளது. வீடு வீடாகச் சென்று பரப்புரை மேற்கொள்ள ஐந்து பேருக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கரோனா தடுப்பு நடவடிக்கையாக காணொளி வாயிலாக அரசியல் கட்சிகள் பரப்புரை மேற்கொள்ள தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
அதன்பின், கரோனா பரவல் குறைந்து வருவதால், படிப்படியாக தளர்வுகள் அளிக்கப்பட்டு, 300 பேருக்கு மிகாமல் உள்ளரங்கு கூட்டங்களை நடத்த அனுமதி அளிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று பேரணி, பொதுக் கூட்டங்களுக்கு அனுமதி அளிப்பது குறித்து இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா ஆலோசனை மேற்கொள்கிறார்.
இதையும் படிங்க: இந்தியாவில் தொடர்ந்து குறையும் கரோனா பாதிப்பு!