பெங்களூரு: கர்நாடகாவின் குடகு மற்றும் தக்சின கன்னடா ஆகிய மாவட்டங்களின் இன்று (ஜூன் 28) காலை 7.45 மணியளவில் பல இடங்களில் நிலநடுக்கம் உணரப்பட்டது. குறிப்பாக, குடகு மாவட்டத்தில் உள்ள கரிகே, பெராஜே, பாகமண்டலா, மடிகேரி, நாபோக்லு மற்றும் தக்சின கன்னடா மாவட்டத்தில் உள்ள சம்பாஜே, கூனட்கா மற்றும் சுல்லியா அருகே உள்ள குட்டிகாரு ஆகிய இடங்களில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தை சுமார் 3 முதல் 7 வினாடிகள் உணர்ந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். மேலும், அப்போது மக்கள் பலரும் பீதியில் தங்கள் வீடுகளை விட்டு வெளியே ஓடி வந்தனர். இதற்கு முன்னர் இரண்டு முறை நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாகவும், மூன்றாவது முறையாக இதை உணர்ந்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். நில அதிர்வின்போது பதிவான சிசிடிவி காட்சிகளும் வெளியாகியுள்ளன.
கடந்த மூன்று நாட்களில், சுல்லியாவைச் சுற்றியுள்ள பகுதிகளில் இரண்டாவது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அங்கு வீட்டில் உள்ள பாத்திரங்கள், பர்னிச்சர் பொருள்கள் மற்றும் மேற்கூரையின் மேல் பகுதிகள் ஆகியவை அசைந்ததாகக் கூறப்படுகிறது. மூன்று நாட்களுக்கு முன்பு சுல்லியா மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் 2.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
மேலும், கடந்த 2018ஆம் ஆண்டு குடகு மாவட்டத்தில் இதேபோன்ற நில அதிர்வு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து மாவட்ட அலுவலர்களும், கர்நாடக மாநில பேரிடர் மேலாண்மை ஆணையமும் ஆய்வு செய்து வருகின்றன.
இதையும் படிங்க: அசாம் வெள்ள நிலவரம் - 22 லட்சம் பேர் பாதிப்பு