மும்பை: போதையில் விமான சிப்பந்திகளிடம் ரகளையில் ஈடுபட்ட வெளிநாட்டுப் பெண்ணை மும்பை விமான நிலைய பாதுகாப்பு படையினர் கைது செய்தனர். ஐக்கிய அரபு அமீரகம் அபுதாபியில் இருந்து மும்பை சத்திரபதி சிவாஜி விமான நிலையம் நோக்கி சென்ற சர்வதேச விமானத்தில் பயணித்த வெளிநாட்டு பெண் மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது.
எக்கனாமி கிளாசில் பயணிக்க டிக்கெட் எடுத்திருந்த பெண், மதுபோதையில் பிசினஸ் கிளாசில் போய் அமர்ந்து கொண்டதாக கூறப்படுகிறது. எக்கனாமி கிளாஸ் இருப்பிடத்திற்கு சென்று அமருமாறு கூறிய விமான பணிப்பெண்ணிடம், மது போதையில் இருந்த பெண் சண்டையிட்டதாக சொல்லப்படுகிறது.
மேலும் பணிப்பெண்ணை தாக்கி, தகாத வார்த்தையில் திட்டிய பெண் பயணி, அவர் மீது எச்சில் துப்பியதாக சொல்லப்படுகிறது. மற்ற ஊழியர்கள் மற்றும் விமானி ஆகியோர் சமாதானப்படுத்த முயற்சித்தும் அடங்காத பெண் பயணி அரை நிர்வாணத்துடன் விமானத்தில் சுற்றி ரகளையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
சம்பவம் தொடர்பாக விமான ஊழியர்கள் அளித்தப் புகாரில், மும்பை நிலையத்தில் விமானம் தரையிறங்கியதும், விமான நிலைய பாதுகாப்பு ஊழியர்கள் பெண் பயணியை கைது செய்தனர். மேலும் விமான போக்குவரத்துச் சட்டத்தின் கீழ் பெண் பயணி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாக அதிகாரிகள் கூறினர்.
இதையும் படிங்க: 'நான் கடவுள்' எனக்கூறிய சாமியாருக்கு மீண்டும் ஆயுள் தண்டனை.. பாலியல் வன்கொடுமை வழக்கில் தீர்ப்பு!