பரேலி: உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள ஃபரித்பூர் பகுதியில் குடிபோதையில் இரண்டு நபர்கள் இரண்டு நாய்க்குட்டிகளின் காதுகள் மற்றும் வால்களை வெட்டி, மதுபானத்துடன் உண்டதாக, பீப்பிள் ஃபார் அனிமல்ஸ் (பிஎஃப்ஏ) மீட்புப் பொறுப்பாளர் தீரஜ் பதக் என்பவர் புகார் அளித்துள்ளார். அவர் அளித்தப் புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
அந்தப் புகாரில் ”ஃபரித்பூரில் வசிக்கும் முகேஷ் வால்மீகி என்பவர் தனது நண்பருடன் சேர்ந்து மது அருந்திக்கொண்டு இருந்துள்ளனர். அப்போது போதை தலைக்கேறிய இருவரும், அங்கே இருந்த 2 நாய்க்குட்டிகளின் காதுகள் மற்றும் வாலை வெட்டி, மது குடிக்கும் போது ’சைட் டிஷ்ஷாக’ சாப்பிட்டு, கொடூரச் செயலில் ஈடுபட்டுள்ளனர்” என குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில், "தீரஜ் பதக் அளித்தப் புகாரின் அடிப்படையில், இருவர் மீது விலங்குகள் வதை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறோம். விசாரணைக்கு பின் அடுத்த நடவடிக்கை எடுக்கப்படும். காயமடைந்த நாய்க்குட்டிகள் இரண்டும், சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: பெங்களூருவில் கருக்கலைப்பு மாத்திரை விழுங்கிய பெண் உயிரிழப்பு