பாட்னா: டெல்லியிலிருந்து பீகார் மாநிலம் பாட்னாவுக்கு, நேற்றிரவு(ஜன.8) இண்டிகோ பயணிகள் விமானம் புறப்பட்டது. அப்போது, விமானப் பயணிகள் மூன்று பேர் குடிபோதையில் பிரச்னை செய்தனர். விமானப் பணிப்பெண்களிடமும் அநாகரிகமாக நடந்து கொண்டனர்.
தகராறு செய்த பயணிகளை விமான பணிப்பெண்கள் மற்றும் விமான ஊழியர்கள் கட்டுப்படுத்த முயற்சித்தனர். ஆனால், அவர்கள் விமானத்தின் கேப்டன் உள்பட அனைவரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். விமானம் புறப்பட்டதிலிருந்து தரையிறங்கும் வரை இடைவிடாமல் அராஜகம் செய்து வந்ததால், சகப் பயணிகளுக்கும் தொந்தரவாக இருந்தது.
இரவு 10 மணியளவில் பாட்னா விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கியது. பயணிகள் விமானத்திலிருந்து இறங்கிய பிறகு, விமான ஊழியர்கள் தகராறு செய்த இரண்டு பயணிகளை பிடித்து சிஐஎஸ்எஃப் (CISF) அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். ஒருவர் தப்பித்துவிட்டார்.
பின்னர் இந்த இரு பயணிகளையும் பாட்னா விமான நிலையப் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரும் பீகார் மாநிலம், வைஷாலி மாவட்டத்தில் உள்ள ஹாஜிபூரைச் சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது. தப்பியோடிய மூன்றாவது பயணி பிந்து குமாரை போலீசார் தேடி வருகின்றனர்.
முன்னதாக கடந்த மாதம் இஸ்தான்புல்லில் இருந்து டெல்லி நோக்கி சென்ற இண்டிகோ விமானத்தில் வாக்குவாதம் செய்த பயணி ஒருவரை விமான பணிப்பெண் சரமாரியாக திட்டினார். இந்த வீடியோ வைரலானது.
இதையும் படிங்க: Pongal Special Bus: பொங்கல் பண்டிகை சிறப்புப்பேருந்துகளுக்கு 1,33,659 பேர் முன்பதிவு