பாலசோர்: ஒடிசா மாநிலம், பாலசோர் மாவட்டம், சந்திர்பூரில், ஏவுகணைகளை பரிசோதிக்கும் இரண்டு தளங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்துக்கு சொந்தமான ஒருங்கிணைந்த பரிசோதனை மையத்தில் (ITR) பணியாற்றும் மூத்த தொழில்நுட்ப ஊழியர்தான் கைதாகியுள்ளார். இவர், ஏவுகணைகள் குறித்த முக்கிய தகவல்களை பாகிஸ்தானை சேர்ந்த பெண்ணிடம் பகிர்ந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதுகுறித்து 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், தொழில்நுட்ப ஊழியரை கைது செய்தனர். மேலும் அவரது செல்போனை பறிமுதல் செய்தனர். விசாரணையில், பாகிஸ்தானின் ராவல்பிண்டியை சேர்ந்த பெண்ணிடம், டிஆர்டிஓ ஊழியருக்கு ஓராண்டுக்கு முன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த பெண், வாட்ஸ்அப்பில் ஆபாசப் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அனுப்பியுள்ளார்.
மேலும் இருவரும் சாட்டிங் செய்வதை வாடிக்கையாக கொண்டிருந்ததும் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது. மேலும், அந்தப் பெண்ணுக்கு பாதுகாப்பு அமைச்சகத்தின் முக்கிய தகவல்கள், இந்தியா தயாரிக்கும் ஏவுகணைகள் குறித்த தரவுகளை கைதான ஊழியர் அனுப்பியதும் தெரியவந்துள்ளது.
ஏற்கனவே பாதுகாப்பு தொடர்பான தகவல்களை கசிய விட்டதாக, கடந்த 2021-ம் ஆண்டு ஐடிஆரில் பணியாற்றிய ஒப்பந்த ஊழியர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சத்தீஸ்கரில் கோர விபத்து.. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் உயிரிழப்பு..