இந்தியாவில் வானிலை ஆராய்ச்சி துறையில் பணியாற்றிய அன்னா மாணி 1918 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23 இல் பிறந்தார். இவர் கேரளாவின் பீர்மேடு என்னும் கிராமத்தில் பிறந்து பல சாதனைகளை புரிந்த சாதனைப்பெண்மணியாவார். இதனால் இவரின் சிறப்பை போற்றும் வகையில் கூகுள் நிறுவனம் அவரது பிறந்த நாளான இன்று சிறப்பு டூடலை வெளியிட்டுள்ளது.
சிறு வயதிலிருந்தே சுதந்திர போராட்டத்தால் ஈர்க்கப்பட்டு வைக்கம் சத்தியாகிரகத்தில் பங்கேற்றார். அதன் பின் கதர் ஆடைகளை மட்டுமே அணிய தொடங்கினார். அன்னா மாணிக்கு மருத்துவம் படிக்க விருப்பம் இருந்தது. இருப்பினும் இயற்பியல் மீது உள்ள ஆர்வத்தால் சென்னை மாநிலக் கல்லூரியில் இயற்பியல் மற்றும் வேதியியல் பிரிவுகளில் கெளரவ இளநிலை அறிவியல் பட்டம் பெற்றார். அன்னா மாணி அவரது பெற்றோருக்கு 7வது குழந்தையாக பிறந்தார்.
மேலும் மாநிலக் கல்லூரியில் இயற்பியல் டாக்டர் பட்டத்திற்க்காக ஐந்து ஆராய்ச்சி கட்டுரைகள் எழுதினார். இருப்பினும் அவர் இயற்பியலில் முதுகலை பட்டத்தை படிக்காததால் அவருக்கு முனைவர் பட்டம் கிடைக்கவில்லை. இதன் பின்னர் லண்டன் சென்று இம்பீரியல் காலேஜ் லண்டனில் வளி மண்டலவியல் கருவி மயமாக்கல் படிப்பை தேர்ந்தெடுத்து படித்தார்.
பின்னர் 1948 இல் புனேவில் உள்ள வானிலை ஆராய்ச்சி மையத்தில் சேர்ந்து பணியாற்ற தொடங்கினார். அதில் துணை இயக்குநராக பணியாற்றிய அன்னா மாணி 1976 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார். 1994 ஆம் ஆண்டு பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட இவர் 2001 இல் இயற்கை எய்தினார்.
அன்னா மாணி சூரிய மற்றும் காற்று ஆற்றல் அளவீடுகள், ஓசோன் அளவீடுகள் ஆகியவை குறித்து ஆய்வு நடத்தி ஏராளமான ஆய்வேடுகளைப் வெளியிட்டார். இரண்டு புத்தகங்களும் வெளியிட்டுள்ளார்.
இந்தியாவிற்கும், இந்திய வானவியல் ஆராய்ச்சி துறைக்கும் பெருமை சேர்க்க இவரின் அயராத முயற்சியே காரணமாகும். கூகுள் வெளியிட்ட டூடலில் இவரின் உருவம் போன்று வடிவமைக்கப்பட்டு, இவரின் இயற்பியல் சாதனைகளை விளக்குமாறு உள்ளது.
இதையும் படிங்க:76 ஆவது சுதந்திர தினத்திற்கு டூடல் வெளியிட்ட கூகுள்