ராய்ப்பூர்: நாடு முழுவதும் கரோனா தொற்றின் இரண்டாம் அலை மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்திவருகிறது. தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் உரிய சிகிச்சைப் பெற போதுமான மருத்துவமனை, படுக்கை வசதிகள், ஆக்சிஜன், தொற்று பாதிப்பு ஏற்படாமல் தடுக்க செலுத்தப்படும் தடுப்பூசி ஆகியவற்றிற்கு நாடு முழுவதும் பெரும் தட்டுப்பாடு நிலவிவருகிறது.
தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சிகிச்சையளிக்க மருத்துவ வசதிகள் இல்லாத காரணத்தால், தொற்று பாதிப்பு விகிதம் குறைவாக உள்ளவர்கள் வீட்டிலிருந்தபடியே சிகிச்சைப் பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர். இன்னும் சிலர் தொற்று பாதிப்பினை மறைக்கும் நோக்கில் மருத்துவர் பரிந்துரையின்றி பல்வேறு மருந்துப் பொருள்களை தாங்களாகவே எடுத்துக் கொள்கின்றனர். இது மிகப்பெரும் ஆபத்தை விளைவிக்கும் என எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள்.
இது தொடர்பாக சத்தீஸ்கர் மருத்துவக் கவுண்சிலைச் சேர்ந்த மருத்துவர் ராகேஷ் குப்தா பேசுகையில், "நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை திடீரென அதிகரிக்கத் தொடங்கியதால், தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சிகிச்சை அளிப்பதும், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களைக் கண்டறிந்து கரோனா பரிசோதனை மேற்கொள்வதும் மிகப் பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் மக்கள் பலர் மருத்துவமனைக்கு வர அச்சமடைந்து வீட்டிலேயே மருத்துவர்கள் பரிந்துரையின்றி தாங்களாகவே மருந்துகளை உட்கொள்கின்றனர்.
நுரையீரல் தொற்றால் பாதிக்கப்படும் பலர் மருத்துவர் பரிந்துரையின்றி இருமல் மருந்துகளை எடுத்துக் கொள்கின்றனர். இது மிகவும் தவறானது. ஏனெனில், இந்த இருமல் மருந்துகள் திடீரென உடலில் உள்ள வைரசின் எண்ணிக்கையை அதிகரித்துவிடும்" என்று எச்சரித்தார்.