கடந்த ஜனவரி 31ஆம் தேதி, பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, பிப்ரவரி 1ஆம் தேதி, நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட் கூட்டத் தொடரின் 9ஆவது நாளான இன்று, மாநிலங்களவையில் கேள்வி நேரத்தில் பங்கேற்று பேசிய திமுக எம்பி வில்சன், "தமிழ்நாடு, புதுச்சேரியை சேர்ந்த கரும்பு விவசாயிகளுக்கு வழங்கப்படவேண்டிய ரூ.1000 கோடி நிலுவைத் தொகையை சிறப்பு மானியம் மூலமாக உடனடியாக வழங்க வேண்டும்" என்றார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், "தமிழ்நாட்டில் கரும்பு உற்பத்தியாளர்கள் சொல்ல முடியாத துன்பத்திற்கு ஆளாகி பெரும் நிதி நெருக்கடியில் உள்ளனர். கரும்பு விவசாயிகள் தங்கள் உற்பத்தியை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள சுமார் 44 சர்க்கரை ஆலை தொழிற்சாலைகளுக்கு விற்கிறார்கள்.
இருப்பினும், கடந்த இரண்டு ஆண்டுகளாக, தனியார் மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகள், மாநில அரசின் கூட்டுறவு சங்கம் உள்ளிட்ட கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் கரும்பு உற்பத்தியாளர்களுக்கு கொள்முதல் விலையை செலுத்தவில்லை, சர்க்கரை உற்பத்தியாளர்களால் இந்த கரும்பு உற்பத்தியாளர்களுக்கு சுமார் 1000 கோடி ரூபாய் தர வேண்யிடிருக்கிறது.
துரதிர்ஷ்டவசமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 10க்கும் மேற்பட்ட சர்க்கரை ஆலைகள் மூடப்பட்டுள்ளது. அவர்கள் கரும்பு கொள்முதல் பணத்தை கொடுக்காததால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் துன்பத்தில் சிக்கியுள்ளனர். சர்க்கரை ஆலைகள் மூடப்படுவதால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் சிக்கலில் விடப்படுகிறார்கள், அவர்களுக்கு இரண்டு முதல் மூன்று ஆண்டுகள் சம்பளம் வழங்கப்படவில்லை.
கரோனா ஊரடங்கு இருந்ததால் பயிர்களை அறுவடை செய்ய உழைப்பு பற்றாக்குறை ஏற்பட்டது. கடலூர், நாகப்பட்டினம் மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான கரும்பு விவசாயிகள் பெரும் கடன்களில் உள்ளனர் மற்றும் தங்கள் நிலங்களை அடமானம் வைத்து, நகைகள் அனைத்தையும் விற்று, தங்கள் சேமிப்புகளை வடிகட்டி, கிட்டத்தட்ட தெருக்களில் நிற்கிறார்கள்.
மூடப்பட்ட சர்க்கரை ஆலைகளின் பிரச்னைகளை அரசு கண்டறிந்து இந்த சர்க்கரை ஆலைகளுக்கு மறுவாழ்வுப் பொதிகளை வடிவமைக்க வேண்டும். கரும்பு உற்பத்தியாளர்கள், சங்கங்கள், இயங்கும் மற்றும் மூடப்பட்ட சர்க்கரை ஆலைகளை நிர்வகித்தல் மற்றும் அவற்றின் அலகுகளை மறுசீரமைக்க மற்றும் மறுதொடக்கம் செய்ய வாய்ப்பளிக்கும் மாநில அரசு அலுவலர்களுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தைகளை நடத்த வேண்டும்" என்றார்.