புதுச்சேரி: முதலமைச்சர், துணைநிலை ஆளுநர் ஆகியோரிடம் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் இல்லை என்றும், புதுச்சேரியில் மருத்துவ கல்விக்கான கலந்தாய்வை விரைவில் நடத்தாவிட்டால் திமுக சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்றும் புதுச்சேரி சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் இரா.சிவா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, புதுச்சேரி சட்டபேரவை எதிர்கட்சி தலைவர் சிவா செய்தியாளர்களிடம் பேசியதாவது, "புதுவை மாநிலத்தில் மருத்துவ கல்விக்கான சென்டாக் கலந்தாய்வு தொடங்குவதில் தொடர்ந்து முன்னுக்குப் பின்னான செய்திகள் வந்து கொண்டிருக்கிறது. நம்மை சுற்றியுள்ள மாநிலங்களில் மருத்துவக் கலந்தாய்வு முடிவடைந்துள்ளது. புதுச்சேரியில் இன்னும் முதல் கட்ட கலந்தாய்வே தொடங்கவில்லை.
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு புதுச்சேரி அரசு 10 சதவிகித இடஒதுக்கீட்டை பெற்று தர முடியாத நிலையில் உள்ளது. மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் துணைநிலை ஆளுநருக்கும், முதலமைச்சருக்கும் இல்லை. புதுவை அரசு மருத்துவ படிப்பில் 10 சதவீத இட ஒதுக்கீடு விஷயத்தில் அலட்சியப் போக்கை கடைபிடித்து வருகிறது.
கடந்த ஆட்சியிலேயே தீர்மானம் போட்டு ஒப்புதல் பெறப்பட்டது. ஆனால் தற்பொழுது மீண்டும் காலம் கடந்து தீர்மானம் நிறைவேற்றிய கோப்பு டெல்லியில் முடங்கி கிடக்கிறது. முதலமைச்சர் நம்பியுள்ள ஒன்றிய அரசு இதற்கு அனுமதி கொடுக்குமா என்பது கேள்விக்குறிதான். இதனால் அரசு மருத்துவக் கல்லூரியில் தங்களுக்கு இடம் கிடைக்குமா என்று மாணவர்களும் பெற்றோரும் அச்சத்தில் உள்ளனர்.
கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரிக்கு என தனியாக செவிலியர் கல்லூரி தொடங்க அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து விட்டது. இதற்கான அரசாணையில், ஆளுநர் கையெழுத்திடாமல் உள்ளார். இதனால் 60 இடங்கள் புதுச்சேரி மாணவர்களுக்கு கிடைக்கும். செலிவியர் கல்லூரி கவர்னரின் அனுமதிக்காக காத்திருப்பது மாணவர்களின் எதிர்காலத்தின் மீது அரசின் அக்கறையின்மையை காட்டுகிறது.
மேலும், புதுச்சேரி அரசு மருத்துவ கலந்தாய்வு நடத்துவதற்கு வரும் 5 ஆம் தேதிக்குள் முடிவு எடுக்கவில்லை என்றால் திமுக மாணவரணி தலைமையில் போராட்டம் நடத்தப்படும். சிபிஎஸ்சி பாடத்திட்டத்தை பயிற்றுவிக்க அரசு பள்ளிகளில் எந்த கட்டுமானமும் இல்லை. ஆசிரியர்களுக்கு போதிய பயிற்சி இல்லை.
தமிழக பாட நூல் நிறுவனத்திடம் இருந்து ஆறு கோடி ரூபாய்க்கு மாநில பாடதிட்ட புத்தகங்களை வாங்கி விட்டு, இப்போது அதனை திருப்பி வாங்கிக் கொள்ள வேண்டும் என தமிழக பாடநூல் வாரியத்திற்கு கடிதம் அனுப்பி வருகின்றனர். தேசிய நல்லாசிரியர் விருதுக்கு புதுவையை சேர்ந்த யாரும் தேர்வாகாததற்கு ஆளுநர் தான் பதில் சொல்ல வேண்டும்.
பெண்களுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கும் திட்டத்தில் 13 ஆயிரத்து 300 மகளிருக்கு ஒரு முறை மட்டுமே உதவி வழங்கப்பட்டுள்ளது. இதில் பல குழப்பங்கள் உள்ளன. இதுவரை இந்த திட்டத்தில் 1 கோடியே 34 லட்ச ரூபாய் மட்டுமே நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. முதலமைச்சரின் துறைகள் அனைத்தும் தோல்வியடைந்து உள்ளது.
மோடிக்கு புதுவை மீது பாசம் இருப்பதாக முதலமைச்சர் கூறுகிறார். ஆனால் எந்த திட்டமும் முழுமையாக நிறைவேற்றப் படவில்லை. மார்க்கெட் கட்டும் திட்டத்தில் புதுச்சேரி மார்க்கெட் வியாபாரிகள், பொதுமக்கள், சட்டமன்ற உறுப்பினர்களின் கருத்துக்களை கேட்காமல் அதிகாரிகள் தன்னிச்சையாக முடிவு எடுக்கிறார்கள்" என்று அவர் கூறினார்.
இதையும் படிங்க: குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி.. தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு..