புதுச்சேரி: தீபாவளி திருநாளை முன்னிட்டு, பல்வேறு நிறுவனங்கள் மற்றும் கல்வி நிலையங்களில் தொடர்ந்து 4 நாட்கள் (அக் 22,23,24 மற்றும் 25) விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இதனால் சென்னை, பெங்களூரு உள்பட அண்டை மாவட்டத்தில் பணியாற்றிய புதுச்சேரி மக்கள் பலரும் ஊர் திரும்பினர்.
இந்த நிலையில் தீபாவளி விடுமுறை முடிவுற்றதால், நேற்று (அக் 25) இரவு முதல் பலரும் அலுவல் பணிகளுக்காக வெளியூருக்குப் புறப்பட்டனர். அதேநேரம் புதுச்சேரி வந்த சுற்றுலா பயணிகளும் ஊர் திரும்ப, புதுச்சேரி பேருந்து நிலையத்தில் கடும் நெரிசல் காணப்பட்டது.
இதனால் போக்குவரத்து ஊழியர்கள் திணறினர். இதில் பெரும்பாலானோர் சென்னைக்கு புறவழியாகவும், கிழக்கு கடற்கரை வழியாகவும் செல்வதற்கு பேருந்துகள் சரிவர இல்லாததால் சுமார் இரண்டு மணி நேரம் காத்திருந்து செல்லும் நிலை ஏற்பட்டது. இதனால் அனைத்து பேருந்துகளிலும், பயணிகள் முண்டியடித்துக் கொண்டு ஏறிய காட்சிகளும் புதுச்சேரி பேருந்து நிலையத்தில் அரங்கேறின.
இதையும் படிங்க: சென்னையில் தீபாவளி பண்டிகையில் 354 வழக்குகள் பதிவு