கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, அதே ஆண்டில் ஏப்ரல் 13அன்று கர்நாடக மாநிலம் கோலாரில் நடைபெற்ற காங்கிரஸின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், மக்களவை உறுப்பினருமான ராகுல் காந்தி கலந்து கொண்டார்.
அந்தக் கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, “நீரவ் மோடி, லலித் மோடி, நரேந்திர மோடி என அனைவருக்கும் எப்படி ஒரே பெயராக இருக்க முடியும்? ;
எப்படி அனைத்து திருடர்களும் மோடி என்ற இணை பெயரோடு இருக்க முடியும்?” எனப் பேசினார். இதற்கு பாஜக தரப்பில் கடும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து பாஜக சட்டமன்ற உறுப்பினர் புர்னேஷ் மோடி, மோடி குடும்பத்தாரின் சமூக மரியாதை மற்றும் பெயருக்கு களங்கம் விளைவித்ததாக வழக்குத் தொடர்ந்தார். இதற்கு ராகுல் காந்தி தரப்பில், கருத்து மற்றும் பேச்சுரிமையால் பேசப்பட்டது என வாதிடப்பட்டது.
இருப்பினும், இந்த வழக்கில் நேற்று (மார்ச் 23) தீர்ப்பளித்த குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத் மாவட்ட நீதிமன்றம், ராகுல் காந்தியை குற்றவாளி என தீர்ப்பு அளித்தது. அது மட்டுமல்லாமல், ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதித்தது. இருப்பினும், தண்டனை விதிக்கப்பட்ட அடுத்த சில நிமிடங்களிலேயே ராகுல் காந்தி ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் எம்.பி. ராகுல் காந்தி, 'மோடி குடும்பப்பெயர்' குறித்து பேசி தண்டனை பெற்ற நிலையில், அவரை, நேற்று முதல் வயநாடு மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து, தகுதி நீக்கம் செய்துள்ளதாக மக்களவை செயலகம் அறிவித்துள்ளது.
இதையும் படிங்க: சென்னையில் பல்வேறு இடங்களில் மோடி உருவபொம்மையினை எரித்து ஆர்ப்பாட்டம்!