டூல்கிட் வழக்கில், கடந்த பிப்ரவரி 13ஆம் தேதி, 22 வயதே ஆன பெங்களூருவை சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் திஷா ரவி கைது செய்யப்பட்டார். இந்நிலையில், அவருக்கு டெல்லி அமர்வு நீதிமன்றம் பிணை வழங்கி உத்தரவிட்டுள்ளது. இரண்டு லட்சம் ரூபாய் ஜாமீன் தொகை செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து கூடுதல் அமர்வு நீதிபதி தர்மேந்திர ரானா கூறுகையில், "தகுந்த ஆதாரங்கள் இல்லாததை கருத்தில் கொள்கிறேன். குற்றப் பின்னணி இல்லாத 22 வயது இளம் பெண்ணுக்கு பிணை மறுக்க எந்த காரணங்களும் இல்லை" என்றார்.
திஷா ரவியின் போலீஸ் காவலை மேலும் நான்கு நாட்களுக்கு நீட்டிக்க வேண்டும் என டெல்லி காவல்துறை தாக்கல் செய்த மனுவை பட்டியாலா நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. ஏற்கனவே, அவர் ஆறு நாள்கள் போலீஸ் காவலிலும், இரண்டு நாள்கள் நீதிமன்ற காவலிலும் வைக்கப்பட்டிருந்தார்.
முன்னதாக, நீதிமன்றத்தில் ஆஜரான திஷா சார்பு வழக்கறிஞர், காலிஸ்தான் இயக்கத்திற்கும் தன்னுடைய கட்சிக்காரருக்கும் எந்த தொடர்பும் இல்லை என வாதாடினார். பிணைக்கு எதிர்ப்பு தெரிவித்த டெல்லி காவல்துறை, திஷா விடுவிக்கப்பட்டால் அவருக்கு எதிரான ஆதாரங்களை கலைக்க வாய்ப்புள்ளது என வாதிட்டது.