கொல்லம்: கேரள மாநிலம், கொல்லம் மாவட்டத்தில், மார்தோமா உயர்கல்வி நிறுவனத்தில் அமைக்கப்பட்ட தேர்வு மையத்தில், நீட் தேர்வு எழுதச்சென்ற மாணவிகளை சோதனை செய்த பெண் அலுவலர்கள், அவர்களின் உள்ளாடைகளை கழற்றும்படி வற்புறுத்தியுள்ளனர். உள்ளாடைகளை கழற்றிய பிறகே தேர்வெழுத அனுமதித்துள்ளனர். இந்தச் சம்பவம் மாணவிகளிடையே பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தியது. இது தொடர்பாக மாணவி ஒருவர் போலீசில் புகார் அளித்தார்.
இந்த நிலையில், பாதிக்கப்பட்ட மாணவி ஒருவர் அந்தச் சம்பவம் தொடர்பாக நம்மிடம் பேசினார். மாணவி கூறும்போது, "தேர்வு மையத்திற்குச் செல்வதற்கு முன்பு பெண் அலுவலர்கள் எங்களை சோதனை மேற்கொண்டனர். அங்கு இரண்டு வரிசைகளில் மாணவிகள் நிற்க வைக்கப்பட்டிருந்தனர். மெட்டல் டிடெக்டர் சோதனையின்போது, நான் இரும்பு கொக்கிகள்(ஹூக்ஸ்) கொண்ட உள்ளாடையை அணிந்திருக்கிறேனா? என்று பெண் அலுவலர்கள் கேட்டனர். நான் ஆம் என்று கூறியதும், என்னை ஒரு வரிசையில் நிற்க வைத்தனர். அங்கு என்ன நடக்கிறது என்றே எனக்கு விளங்கவில்லை. மெட்டல் டிடெக்டர் மூலம் ஸ்கேன் செய்துவிட்டு அனுப்பிவிடுவார்கள் என்று நினைத்தேன்.
ஆனால், தேர்வறைக்குச்செல்லும்போது எனது உள்ளாடையை கழற்றும்படி அறிவுறுத்தினர். பிறகு உள்ளாடையை வாங்கி அங்கிருந்த ஒரு பெட்டியில் போட்டு வைத்தனர். பிறகு தேர்வறைக்குள் அனுப்பினர். தேர்வறையில் ஆண்களும் இருந்ததால், உள்ளாடையின்றி செல்ல மிகவும் அசவுகரியமாக இருந்தது.
அதனால் நான் எனது முடியை முன்னாள் எடுத்துப்போட்டு மார்பகங்களை மறைத்துக்கொண்டேன். என்னைப் போலவே உள்ளாடையை கழற்றிய பெண்கள் அனைவரும் மிகவும் மோசமான மனநிலையில் தேர்வறையில் அமர்ந்திருந்தனர். என்னால் தேர்வில் கவனம் செலுத்த முடியவில்லை. தேர்வறையில் இருந்த பெண்கள் 17 வயது முதல் 23 வயதுடையவர்கள். அவர்கள் சக மாணவர்களுக்கு மத்தியில் எப்படி அமர்ந்திருப்பார்கள் என நினைத்துப் பாருங்கள்.
தேர்வு முடிந்து வந்த பிறகு, எங்களது உள்ளாடைகளை எடுத்துக்கொள்ளும்படி தெரிவித்தனர். அதேநேரம் உள்ளாடையை அங்கு அணியக்கூடாது, ஆனால் எடுத்துச் செல்லலாம் எனக் கூறினர். அதைக் கேட்டு நாங்கள் அதிர்ச்சியடைந்தோம். சில மாணவிகள் அழுதுவிட்டனர்.
அப்போதும், அலுவலர்கள் எங்களைப் பார்த்து, எதற்கு அழுகிறீர்கள்? இது சாதாரணமாக தேர்வு நடைமுறைதான் என்று கூறினர். அவர்கள் கூறியதை மீறி அங்கிருந்த இருட்டறைக்குள் சென்று, நாங்கள் எங்கள் உள்ளாடைகளை அணிந்து கொண்டோம்" என்று தெரிவித்தார்.