உத்தரபிரதேசம்: உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியைச் சேர்ந்த ரவீந்திர பிரதாப் யாதவ் என்பவருக்கு கடந்த 1979ஆம் ஆண்டு திருமணமாகியுள்ளது. திருமணம் ஆனபோதும் அவரது மனைவி ரவீந்திர பிரதாப் உடன் சேர்ந்து வாழவில்லை என தெரிகிறது. திருமணம் முடிந்த சில நாட்களிலேயே பிரதாபின் மனைவி அவரிடமிருந்து விலகிச் செல்லத் தொடங்கியுள்ளார். இயல்பாக பேசிப் பழகாமலும், உடலுறவு கொள்ளாமலும் இருந்ததாக தெரிகிறது. இதனால், இருவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக மனைவியிடம் பேசி பிரச்சினையை தீர்க்க யாதவ் முயன்றுள்ளார். ஆனால், அதற்கும் அவரது மனைவி செவி சாய்க்கவில்லை, தொடர்ந்து கணவரிடமிருந்து விலகியே இருந்து வந்தார்.
இந்த நிலை இப்படியே தொடர்ந்து வந்த சூழலில், யாதவின் மனைவி தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். மனைவி திரும்ப வந்துவிடுவார் என காத்திருந்த யாதவிற்கு ஏமாற்றமே மிஞ்சியது. இதனால், பல முறை நேரில் சென்று சமாதானப்படுத்தி அழைத்து வர முயற்சி செய்துள்ளார். வீட்டிற்கு திரும்ப வரும்படியும், அனைத்து சிக்கல்களையும் பேசித் தீர்த்துவிட்டு சேர்ந்து வாழலாம் என்றும் மனைவியிடம் மன்றாடிக் கேட்டுள்ளார். ஆனால், எதற்கும் அசையாத அந்த பெண்மணி, கணவர் வீட்டிற்கு திரும்பிச் செல்ல மறுத்துவிட்டார். இதனால், யாதவ் மிகுந்த மன உளைச்சலில் இருந்துள்ளார்.
ரவீந்திர பிரதாப் யாதவ் பல ஆண்டுகளாக மனைவியை சமரசம் செய்ய முயற்சித்தும், எல்லா முயற்சிகளும் தோல்வியடைந்ததால், கடந்த 1994ஆம் ஆண்டு விவாகரத்து செய்யும் முடிவுக்கு வந்தார். அதன்படி, கிராமத்தில் நடந்த பஞ்சாயத்தில் இருவரும் பரஸ்பர விகாரத்தது செய்ய ஒப்புக் கொண்டனர். அதற்காக, யாதவ் தனது மனைவிக்கு நிரந்தர ஜீவனாம்சமாக 22,000 ரூபாய் வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. யாதவ் அதனையும் ஏற்றுக் கொண்டார்.
இதனைத் தொடர்ந்து யாதவின் மனைவி மறுமணம் செய்து கொண்டார். அதேநேரம் யாதவ் தங்களது திருமண உறவை சட்டரீதியாக ரத்து செய்ய முயற்சி மேற்கொண்டார். நீண்ட காலமாக பிரிந்து வாழ்ந்தது மற்றும் மன ரீதியாக தனக்கு ஏற்பட்ட கொடுமைகளை காரணங்களாக வைத்து யாதவ் வாரணாசி குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்துக் கோரி விண்ணப்பித்தார். ஆனால், இந்த வழக்கு விசாரணைக்கு யாதவின் முன்னாள் மனைவி ஆஜராகவில்லை. இதனால் விவாகரத்து கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. வழக்கில் போதிய முகாந்திரம் இல்லை எனக்கூறி வாரணாசி குடும்ப நல நீதிமன்றம் யாதவின் வழக்கை தள்ளுபடி செய்தது.
இதையடுத்து, யாதவ் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மேல்முறையீட்டு வழக்கு நீதிபதி சுனித்குமார் மற்றும் நீதிபதி ராஜேந்திர குமார் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், யாதவை அவரது முன்னாள் மனைவி மன ரீதியாக துன்புறுத்தியிருப்பதாக தெரிவித்தனர். எந்த அடிப்படைக் காரணமும் இல்லாமல் நீண்ட காலமாக வாழ்க்கைத் துணையுடன் உடலுறவு கொள்ள மறுப்பது, மன ரீதியாக கொடுமைப்படுத்துவதாகும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். இதையடுத்து, யாதவின் கோரிக்கையை ஏற்ற நீதிபதிகள் விவாகரத்துக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டனர்.