டெல்லியில் வன்புணர்வு செய்யப்பட்டு எரிக்கப்பட்டதாகக் கூறப்படும் சிறுமியின் உடலின் மீதமுள்ள பாகங்களை அவரது பெற்றோர் தீன் தயாள் உபத்யாய் மருத்துவமனையில் இருந்து முன்னதாகப் பெற்றனர்.
தொடர்ந்து பழைய நங்கலில் உள்ள இடுகாட்டில் சிறுமியின் உடல் பாகங்கள் எரியூட்டப்பட்டதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து தென்மேற்கு டெல்லி துணை காவல் ஆணையர் இன்கித் பிரதாப் சிங் கூறுகையில், "பழைய நங்கல் டெல்லி கான்த் வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமியின் உடலின் திசுக்களையும் பாதங்களையும் அவரது பெற்றோர் தகனம் செய்தனர்.
அங்கு போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 25 முதல் 30 நபர்கள் தகனம் செய்யும் இடத்திற்கு வந்த நிலையில் அவர்களுக்கு சிறுமியின் பெற்றோர் அனுமதி வழங்க மறுத்தனர். இதனால் அவர்களை அங்கிருந்து செல்ல காவல் துறையினர் அறிவுறுத்தினர்" என்றார்.
கடந்த ஆகஸ்ட் 1ஆம் தேதி தென்மேற்கு டெல்லியில் உள்ள மயானத்தில் பூசாரி ஒருவரும், மயான ஊழியர்கள் மூன்று பேரும் சிறுமியை கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்து பெற்றோரின் அனுமதியின்றி எரியூட்டப்பட்டதாக கூறப்படும் இச்சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
சிறுமியின் உடல் எரிக்கப்பட்ட நிலையில் அவரது இறப்புக்கான காரணம் காவல் துறையினரால் கண்டறியப்பட முடியாமல் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பூசாரிதான் பாலியல் வன்புணர்வு செய்து தங்கள் அனுமதியில்லாமல் சிறுமியின் உடலை எரித்ததாக சிறுமியின் பெற்றோர் கூறினர். இந்த நிலையில் மீதமிருந்த உடல் பகுதிகளை அவரது பெற்றோர் தற்போது தகனம் செய்துள்ளனர்.
இதையும் படிங்க: டெல்லி சிறுமியின் குடும்பத்தினருக்கு ராகுல் காந்தி ஆறுதல்