அண்டை மாநிலங்களில் எரிக்கப்படும் பசுமைக் கழிவுகளால் தலைநகர் டெல்லியில், 40 விழுக்காட்டிற்கும் மேலாக காற்று மாசு அதிகரித்துள்ளதாக புவி அறிவியல் அமைச்சகம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் நேற்றும் அங்கு காற்றின் தரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக, இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குளிர் காலம் நிலவுவதால் இரவு நேரங்களில் அதிகப்படியான காற்று மாசு ஏற்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.
நேற்று காலை 10 மணி நிலவரப்படி, காற்றின் தரம் 332ஆக இருந்ததாகவும், அது அடுத்த 24 மணி நேரத்தில் 293 என்ற சராசரியாக மாறியதாகவும் தெரிகிறது.
மாசுபாட்டைக் கட்டுப்படுத்தும் வகையில், கடந்த 2018ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் அளித்த உத்தரவின்படி, தேசிய தலைநகரில் பசுமை பட்டாசுகளை மட்டுமே தயாரிக்கவும், விற்கவும் பயன்படுத்தவும் முடியும் என்று டெல்லி அரசு அறிவித்துள்ளது.
தீபாவளி மற்றும் குர்பூராப் போன்ற பண்டிகை தினங்களன்று மட்டும் இரவு 8 மணி முதல் 10 மணி வரை பட்டாசு வெடிக்கவும், கிறிஸ்துமஸ், புத்தாண்டு தினத்தன்று இரவு 11:55 மணி முதல் அதிகாலை 12:30 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்கவும் அனுமதிக்கப்பட்டுள்ளதாக டெல்லி மாசு கட்டுப்பாட்டு குழு தெரிவித்துள்ளது.
காற்றின் தரக் குறியீடு
0-50: நன்று
51-100: திருப்தி
101-200: மிதமானது
201-300: மோசம்
301-400: மிகவும் மோசம்
401-500: கடுமையான நிலை