மரபியல் மாற்றமடைந்த உருமாறிய கரோனா வைரஸ் பிரிட்டனில் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து அந்நாட்டுடனான விமான போக்குவரத்திற்கு பல்வேறு நாடுகள் தடைவிதித்துள்ளன. இதுவரை, பிரிட்டனிலிருந்து இந்தியாவுக்கு வந்த 18 பேர் உருமாறிய கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், புதியவகை கரோனாவை எதிர்கொள்ள தேசிய தலைநகர் தயாராக உள்ளது என தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், "இதுவரை டெல்லி மூன்று கரோனா அலையை எதிர்கொண்டுள்ளது. மூன்றாம் அலை தீவிரமாக இருந்த நிலையில், தினசரி பரவல் 8,500ஆக பதிவானது.
இருந்தபோதிலும், அதனை கட்டுப்படுத்தினோம். மரபியல் மாற்றமடைந்த உருமாறிய கரோனா வைரஸை எதிர்கொள்ள நாங்கள் தயாராக உள்ளோம்" என்றார்.
ஏழு மாதங்களில் இல்லாத அளவுக்கு டெல்லியில் தினசரி கரோனா பரவல் 564ஆக குறைந்துள்ளது. டிசம்பர் 29ஆம் தேதி மட்டும், கரோனாவால் அங்கு 21 பேர் உயிரிழந்தனர். அங்கு கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 0.98 விழுக்காடாக உள்ளது.