டெல்லி : நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த வழக்கில் எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி மாணவர் உள்பட கும்பலை கைது செய்து டெல்லி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நீர் தேர்வு எழுத வேண்டிய மாணவர்களுக்கு பதிலாக எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டு தேர்வு எழுதுவதாக எழுந்த புகாரில் டெல்லி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார், எய்ம்ஸ் கல்லூரியைச் சேர்ந்த மாணவரை கைது செய்து உள்ளனர். கைது செய்யப்பட்ட மாணவருக்கு நீட் தேர்வு ஆள்மாறாட்டத்தில் உள்ள தொடர்பு குறித்து விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்து உள்ளனர். நீட் தேர்வில் முதலாம் ஆண்டு எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டு தேர்வு எழுதுவதாக புகார் எழுந்தது.
இந்நிலையில் மூன்று தேர்வு மையங்களில் ஆள்மாறாட்டம் நடந்து இருப்பது கண்டறியப்பட்டு உள்ளதாக டெல்லி போலீசார் தெரிவித்து உள்ளனர். நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் எய்ம்ஸ் கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ளதாகவும் விரைவில் முறையான விசாரணை மேற்கொள்ளப்பட்டு பலர் கைது செய்யப்படலாம் என எதிர்பார்ப்பதாகவும் போலீசார் தெரிவித்து உள்ளனர்.
அதேநேரம் டெல்லி எய்ம்ஸ் மருத்துவ கல்லூரியில் 2ஆம் ஆண்டு படிக்கும், நரேஷ் பிஷ்ரோய் என்பவர் இந்த கும்பலுக்கு தலைமை தாங்கியதாகவும், சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு பதிலாக முதலாம் ஆண்டு எய்ம்ஸ் மாணவர்களை தேர்வு எழுத வைத்தது விசாரணையில் தெரியவந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் தங்களை அணுகும் மாணவர்களிடம் 7 லட்ச ரூபாய் வரை வசூல் செய்து ஆள்மாறாட்டம் செய்துள்ளதாகவும் கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து லேப்டாப் மற்றும் செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
நாடு முழுவதும் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவு தேர்வு கடந்த மே மாதம் 7ஆம் தேதி நடைபெற்றது. நாடு முழுவதும் 499 நகரங்களில் நடைபெற்ற இந்த தேர்வில் 20 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் கலந்து கொண்டனர். தேர்வு முறைகேடுகளைத் தடுக்க, பல்வேறு கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்தது. பலகட்ட சோதனைக்குப் பிறகே, தேர்வறைக்குள் மாணவர்கள் அனுமதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : மட்டன் உணவில் செத்த எலியா? வைரலாகும் வீடியோவால் அதிர்ச்சி!