டெல்லி: 2021-ம் ஆண்டு டெல்லி மாநில அரசு மதுபானக் கொள்கையில் திருத்தம் கொண்டு வந்தது. இதன் மூலம் 800 தனியார் நிறுவனங்கள் மதுபானம் விற்பனை செய்ய உரிமம் வழங்கப்பட்டதாகப் புகார் எழுந்தது. மேலும் மதுபானக் கொள்கைகளில் திருத்தம் கொண்டு வர ஆம் ஆத்மி தலைவர்களுக்கு, ரூ.100 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. இதுதொடர்பாக டெல்லி காவல் துறையின் பொருளாதார குற்றப்பிரிவு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய நிலையில், சிபிஐ விசாரணை நடத்த ஆளுநர் சக்சேனா பரிந்துரைத்தார்.
இதுதொடர்பாக துணை முதலமைச்சராக இருந்த மணீஷ் சிசோடியா உள்ளிட்ட 15 பேர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில் கடந்த மாதம் 26ம் தேதி மணீஷ் சிசோடியாவை சிபிஐ கைது செய்தது. பின்னர் சிபிஐ காவலில் எடுக்கப்பட்ட அவர், பின்னர் திகார் சிறையில் நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டார். இதற்கிடையே கடந்த 9ம் தேதி, மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில், மணீஷ் சிசோடியாவை அமலாக்கத்துறை கைது செய்தது. பின்னர் அமலாக்கத்துறையும் அவரை காவலில் எடுத்து விசாரித்தது. கடந்த வெள்ளிக்கிழமை சிசோடியாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய அமலாக்கத்துறை, காவலை நீட்டிக்க வேண்டும் என வலியுறுத்தியது. அதன் அடிப்படையில் சிசோடியாவின் காவலை வரும் 22ம் தேதி வரை நீதிமன்றம் நீட்டித்து உத்தரவிட்டது.
இந்நிலையில் சிபிஐ கைது செய்த வழக்கில், டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில், மணீஷ் சிசோடியா இன்று (மார்ச் 20) ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது சிசோடியாவின் நீதிமன்றக் காவல் ஏப்ரல் 3ம் தேதி வரை 14 நாட்கள் நீட்டிக்கப்படுவதாக நீதிபதி உத்தரவிட்டார். இந்நிலையில் சிசோடியாவின் ஜாமீன் மனு நாளை (மார்ச் 21) விசாரணைக்கு வருகிறது.
மதுபானக்கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட மணீஷ் சிசோடியோ பிப்ரவரி 28ம் தேதி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். ஏற்கனவே வழக்கு ஒன்றில் சிறையில் இருக்கும் சத்யேந்திர ஜெயினும், அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். இதைத் தொடர்ந்து அதிஷி மர்லேனா, சவுரப் பரத்வாஜ் ஆகியோர் புதிய அமைச்சர்களாக நியமிக்கப்பட்டனர்.
இதற்கிடையே, தவறான குற்றச்சாட்டில் மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டதாக முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் புகார் தெரிவித்தார். இதற்கு பிரதமர் நரேந்திர மோடி தான் காரணம் என்றும் அவர் கூறினார். மணீஷ் சிசோடியா மற்றும் சத்யேந்திர ஜெனின் ஆகியோர் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் உண்மை நிலவரத்தை வீடு வீடாக சென்று ஆம் ஆத்மி பரப்புரை செய்யும் என்றும் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியிருந்தார்.