கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்கள், நோய் எதிர்ப்பு சக்தியின்மை காரணமாக கறுப்பு, வெள்ளை, மஞ்சள் பூஞ்சைகளால் தொடர்ந்து பாதிக்கப்படும் நிலை தொடர்ந்து வருகிறது.
இந்த வரிசையில் பூஞ்சைகளை அடுத்து ’சைட்டோமேகுலோ’ (Cytomegalovirus) எனப்படும் வைரஸ் பாதிப்புகள் தற்போது கரோனா பாதித்தவர்களிடம் தென்படத் தொடங்கியுள்ளன.
டெல்லியில் ஐந்து பேர் பாதிப்பு
டெல்லியின் சர் கங்கா ராம் மருத்துவமனையில் இந்த சைட்டோமேகுலோ வைரஸ் பாதிப்புகள் ஐந்து கரோனா நோயாளிகளிடம் கண்டறியப்பட்டுள்ளன. சில நோயாளிகளின் மலக்குடல் பகுதிகளில் இரத்தப்போக்கு ஏற்பட்டதாக புகார்கள் வந்த நிலையில், அதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட சோதனையில் இந்த வைரஸ் பாதிப்பு தெரிய வந்துள்ளது.
நோய் எதிர்ப்பு சக்தியும், வைரஸும்...
கடந்த ஏப்ரல், மே மாதங்களில் பதிவான கரோனா தொற்றின் இரண்டாம் அலையில் இந்த வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதன்படி, கரோனாவால் பாதிக்கப்பட்ட 20 முதல் 30 நாள்களுக்குப் பிறகு நோய் எதிர்ப்புத் திறன் குறைவும், மலக்குடலில் இரத்தப்போக்கும் இவர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
இந்த சைட்டோமேகுலோ வைரஸ், ஹெர்பிஸ் (அக்கி உள்ளிட்ட நோய்களை ஏற்படுத்தக் கூடிய வைரஸ்) வகை வைரஸ் ஆகும். பொதுவாக இந்த வைரஸ் இந்திய மக்கள்தொகையில் 80 முதல் 90 விழுக்காடு மக்களிடன் உடலில் காணப்படுவதே ஆகும். நோய் எதிர்ப்பு சக்தி வலுவாக இருக்கும் சமயங்களில் இந்த வைரஸ் இதுபோன்ற பாதிப்புகளை ஏற்படுத்தாது.
மருத்துவர்கள் சொல்வது என்ன...
பொதுவாக இந்த வைரஸ் இது போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தாத நிலையில், கரோனா தொற்றும் அது சார்ந்த சிகிச்சையானது இந்த அசாதாரண நோய்த்தொற்றுகளுக்கு காரணமாக இருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: கறுப்பு பூஞ்சைக்கு ஆக்சிஜன் மாஸ்க் காரணமா?