டெல்லி: திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டிருந்த பெண்ணை பல முறை பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு ஜாமீன் வழங்க மறுத்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதோடு, நிச்சயதார்த்தத்தைப் பயன்படுத்தி எவரும் ஒரு பெண்ணிடம் உறவுகொள்ள அளிக்கப்படும் அனுமதியாக எடுத்துக்கொள்ளக்கூடாது, எனவும் எச்சரித்துள்ளது.
இந்த வழக்கின்படி, 2020ஆம் ஆண்டு இருவரும் சந்தித்து ஒரு ஆண்டாக காதலித்து வந்த நிலையில், குடும்பத்தினரின் சம்மதத்திற்குப் பிறகு அக்டோபர் 11ஆம் தேதி நிச்சயதார்த்தம் நடந்தது. நிச்சயதார்த்தம் முடிந்து நான்கு நாட்களுக்குப் பிறகு, புகார்தாரரின் கூற்றுப்படி, விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளதால், எந்தத் தவறும் இல்லை என்று கூறி அந்த இளைஞன் பெண்ணை பலமுறை வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளான்.
பின்னர் அப்பெண் இதனால் கர்ப்பமடைந்ததால் அவருக்கு வலுக்கட்டாயமாக மாத்திரை கொடுத்து கருவைக் கலைத்துள்ளார். அதன் பின்னரும் திருமணம் செய்ய மறுத்ததால், அந்தப்பெண் டெல்லி காவல்நிலையத்தில் புகார் அளித்ததன்பேரில் அவனை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் ஜாமீன் வேண்டி அந்த நபர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். பின்னர் இருதரப்பு வாதங்களையும் கேட்ட உயர் நீதிமன்றம் ஜாமீன் மனுவை நிராகரித்தது.
மேலும், ’நிச்சயதார்த்தத்தை யாரும் தங்கள் வருங்கால மனைவியைத் தாக்கவோ அல்லது உறவுகொள்ளவோ அளிக்கப்படும் அனுமதியாக எடுத்துக்கொள்ளக் கூடாது’ எனக் கருத்து தெரிவித்து எச்சரித்தது.
இதையும் படிங்க: கர்ப்பிணியான தன்னை கணவர் அடித்ததால் மருத்துவமனையில் அனுமதி; கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்ட சின்னத்திரை நடிகை