டெல்லி: ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதலமைச்சரும், மக்கள் ஜனநாயக கட்சியின் (பிடிபி) தலைவருமான மெஹபூபா முப்தி, மத்திய அரசுக்கு எதிராக பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருபவர். குறிப்பாக ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டபோது, மத்திய பாஜக அரசுக்கும் பிரதமர் மோடிக்கு எதிராகவும் பல்வேறு கருத்துகளைக் கூறி வந்தார். இதனால் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டவர்களில் மெஹபூபா முப்தியும் ஒருவர் ஆவார்.
இவருடைய பாஸ்போர்ட், கடந்த 2019ஆம் ஆண்டு மே 31ஆம் தேதி உடன் காலாவதி ஆகியுள்ளது. இதனால் புதிய பாஸ்போர்ட் பெறுவதற்காக, அம்மாநில பாஸ்போர்ட் ஆணையத்திடம் 2020 டிசம்பர் 11இல் விண்ணப்பித்துள்ளார். ஆனால், மெஹபூபா முப்தி வெளிநாடு செல்வது என்பது நாட்டின் பாதுகாப்புக்கு இடையூறை ஏற்படுத்துவதாக குற்றப்புலனாய்வுத்துறை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாக கூறி, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் ஸ்ரீநகரில் உள்ள மண்டல பாஸ்போர்ட் அலுவலகம், அவரது பாஸ்போர்ட் புதுப்பிக்கும் விண்ணப்பத்தை 2021ஆம் ஆண்டு மார்ச் 26 அன்று நிராகரித்தது.
இதனை எதிர்த்து ஜம்மு காஷ்மீர் உயர் நீதிமன்றத்தில் முப்தி வழக்கு தொடுத்தார். ஆனால், குற்றப்புலனாய்வு துறை அளித்த அறிக்கையின் அடிப்படையில் பாஸ்போர்ட் வழங்குவதற்கு மறுப்புத் தெரிவித்த பாஸ்போர்ட் அலுவலகம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய முடியாது என அம்மாநில உயர் நீதிமன்றம் 2021ஆம் ஆண்டு ஏப்ரல் 9 அன்று தெரிவித்தது.
எனவே இதனை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் மெஹபூபா முப்தி வழக்குத் தொடுத்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி பிரதீபா எம் சிங், ''ஏற்கனவே இந்த வழக்கு 2 வருடங்களாக நிலுவையில் உள்ளது. அதிலும், தள்ளுபடி செய்யப்பட்ட மனு மீதான மேல்முறையீட்டு வழக்கான இதனை நீதிமன்றம் விசாரித்து வருகிறது.
இந்த நிலையில் 3 மாத காலத்திற்குள் மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவரும், ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதலமைச்சருமான மெஹபூபா முப்திக்கு பாஸ்போர்ட் வழங்குவது தொடர்பாக சம்பந்தப்பட்ட பாஸ்போர்ட் ஆணையம், இனியும் காலம் தாழ்த்தாமல் முடிவெடுக்க வேண்டும்'' என உத்தரவிட்டார்.
இதனிடையே இந்த விவகாரம் தொடர்பாக கடந்த மாதம் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு மெஹபூபா முப்தி கடிதம் ஒன்றை எழுதி இருந்தார். அதில், ''கடந்த 2020ஆம் ஆண்டு நானும் எனது தாயாரும் மெக்காவுக்கு புனிதப் பயணம் மேற்கொள்ள இருப்பதாலும், எனது பாஸ்போர்ட் காலாவதி ஆகிவிட்டதாலும், அதனை புதுப்பிக்க விண்ணப்பித்திருந்தேன்.
ஆனால், நானும் எனது தாயாரும் வெளிநாடு செல்வதால் நாட்டின் பாதுகாப்புக்கு இடையூறாக இருக்கும் என ஜம்மு காஷ்மீர் குற்றப்புலனாய்வு துறை எதிர்மறையான அறிக்கையை வழங்கி உள்ளது. எனவே, எனது பாஸ்போர்ட் புதுப்பித்தல் தொடர்பான விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. இதற்காக நான் 2 வருடங்கள் காத்திருக்கிறேன். எனவே, இந்த விவகாரத்தில் வெளியுறவுத்துறை அமைச்சர் தலையிட்டு உரிய நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டும்'' எனத் தெரிவித்திருந்தார்.
இதையும் படிங்க: ஐநாவில் பேசிய நித்தியானந்தா சிஷ்யை பரபரப்பு குற்றச்சாட்டு