டூல்கிட் தொடர்பான வழக்கில் பெங்களூருவைச் சேர்ந்த 22 வயதே ஆன சுற்றுச்சூழல் ஆர்வலர் திஷா ரவி கைதுசெய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து, தனக்கு எதிராகப் பதிவுசெய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கை தொடர்பான ஆதாரங்களை ஊடகம் உள்பட மூன்றாவது நபர்களுடன் டெல்லி காவல் துறை பகிரக் கூடாது என திஷா ரவி டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்திருந்தார்.
டெல்லி காவல் துறைக்காக முன்னிலையான அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் எஸ்.வி. ராஜூ, திஷா ரவியின் குற்றச்சாட்டுகளை முற்றிலுமாக மறுத்துள்ளார். இது தொடர்பாக டெல்லி காவல் துறை தாக்கல்செய்த பிரமாண பத்திரத்தில், "மனுதாரர்களின் குற்றச்சாட்டுகள் பொய்யானவை. ஊடகத்துடன் எவ்விதமான தகவல்களும் பகிர்ந்து கொள்ளவில்லை" எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் திஷா ரவியின் தனியுரிமையையும் கருத்துச் சுதந்திரத்தையும் பாதுகாப்பது அவசியமாகிறது என டெல்லி உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இது குறித்து நீதிமன்றம், "திஷா ரவிக்கு எதிராகப் பதிவுசெய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கை தொடர்பான ஊடகத்தின் செய்திகள் யாவும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையிலும் ஒருதலைபட்சமாகவும் உள்ளது" எனத் தெரிவித்துள்ளது. ஆனால், அதுபோன்ற செய்திகளை நீக்குவது தொடர்பான உத்தரவுகளை நீதிமன்றம் பிறப்பிக்கவில்லை.