டெல்லி: டெல்லியைச் சேர்ந்த பள்ளிச் சிறுமி ஒருவரின் தந்தை கடந்த 2020ஆம் ஆண்டு உயிரிழந்துள்ளார். இதையடுத்து சிறுமி தனியாக வசித்து வந்தார். தந்தையை இழந்து சிறுமி மனமுடைந்து இருந்துள்ளார். அப்போது, சிறுமியின் தந்தையுடைய நண்பரான, டெல்லி மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை துணை இயக்குநராக பணிபுரியும் நபர், சிறுமியிடம் ஆறுதலாகப் பேசியுள்ளார். சிறுமி பாதுகாப்பு இல்லாமல் இருந்ததால், அவருக்கு உதவுவதாகக் கூறி தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று தங்க வைத்துள்ளார்.
இதையடுத்து, டெல்லி மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையில் பணிபுரிந்த அந்த அதிகாரி, வீட்டில் தங்கியிருந்த மைனர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். சிறுமிக்கு உதவ யாரும் இல்லை என்பதை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, சிறுமியை அடிக்கடி பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்ததாக தெரிகிறது.
இதற்கிடையில் சிறுமி கர்ப்பமாகியுள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த சிறுமி, அந்த அதிகாரியின் மனைவியிடம் சென்று நடந்ததைக் கூறியுள்ளார். இதைக் கேட்ட அந்த பெண்மணி சிறுமிக்கு ஆதரவாக இல்லாமல், தனது கணவரை காப்பாற்ற நினைத்துள்ளார். இதையடுத்து, கருக்கலைப்பு செய்யும் மாத்திரைகளைக் கொடுத்து சிறுமிக்கு கருக்கலைப்பு செய்துள்ளார். மேலும், இது தொடர்பாக வெளியில் யாரிடமும் கூறக் கூடாது என சிறுமியை மிரட்டியுள்ளார்.
கருக்கலைப்பு காரணமாக சிறுமியின் உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில், இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்று போலீசார் விசாரணை மேற்கொண்டதில், சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதும், கருக்கலைப்பு செய்யப்பட்டதும் தெரிய வந்தது. பின்னர் சிறுமியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக அந்த அரசு அதிகாரி மீது போக்சோ உள்ளிட்ட பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த நபருக்கு உடந்தையாக இருந்த அவரது மனைவி மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில், போலீசார் அவரது வாக்குமூலத்தைப் பதிவு செய்தனர். மேலும், சிறுமி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட பிறகு, மாஜிஸ்திரேட் முன்னிலையில் சிறுமி ஆஜர்படுத்தப்படுவார் என்றும் போலீசார் தெரிவித்தனர்.