டெல்லி: கிழக்கு, தெற்கு உள்பட 3 மாநகராட்சிகளாக இருந்த டெல்லி ஒரே மாநகராட்சியாக ஒன்றிணைக்கப்பட்டு 250 வார்டுகளாக மறுசீரமைப்பு செய்யப்பட்டது. இந்த 250 வார்டுகளுக்கும் கடந்த 4-ஆம் தேதி மாநகராட்சி தேர்தல் நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
மாநகராட்சியை கைப்பற்ற 126 வார்டுகளில் வெற்றி பெற வேண்டி இருந்த நிலையில், ஆம் ஆத்மி கட்சி 134 வார்டுகளை கைப்பற்றி அறுதி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. இதன் மூலம் 15 ஆண்டுகள் பா.ஜ.க வசம் இருந்த மாநகராட்சி, முதல் முறையாக ஆம் ஆத்மி கட்சியின் கட்டுப்பாட்டுக்குள் சென்றது. பா.ஜ.க. 104 வார்டுகளையும், காங்கிரஸ் 9 வார்டுகளையும் கைப்பற்றியன.
இந்நிலையில் டெல்லி காங்கிரஸ் துணைத் தலைவர் அலி மெகதி, மற்றும் 243, 245வது வார்டுகளைச் சேர்ந்த இரு கவுன்சிலர்கள் ஆம் ஆத்மி கட்சியில் தங்களை இணைத்து கொண்டனர். இரு வார்டு கவுன்சிலர்களின் திடீர் கட்சித் தாவலால், டெல்லி மாநகராட்சியில் காங்கிரசின் பலம் 7 ஆக குறைந்துள்ளது. மீதமுள்ள காங்கிரஸ் கவுன்சிலர்களும் ஆம் ஆத்மி கட்சியில் இணைய உள்ளதாக அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் துர்கேஷ் பதாக் தெரிவித்தார்.
இதையும் படிங்க: Brittney Griner: ரஷ்யாவுக்கு அமெரிக்க வெளியுறவு அமைச்சர் பிளிங்கன் பாராட்டு!