ஃபரிட்காட்: பஞ்சாபின் ஃபரிட்காட் பகுதிக்கு ராஜ்நாத் சிங் முதன்முறையாகத் தேர்தல் பரப்புரைக்காகச் சென்றுள்ளார். மேடையை அடைந்த அவரை வரவேற்கும்விதமாகத் தொண்டர்கள் பெரிய மாலையை எடுத்துவந்தனர்.
அதனை அவருக்கு அணிவித்து மரியாதை செலுத்த முயற்சித்தனர். ஆனால் நடந்ததோ - கட்சியினர் அவரை நெருங்க, நிலைகுலைந்த ராஜ்நாத் சோபாவில் விழுந்தார். அப்போது அவரது முகம் மாறியது, லேசாக கோபமடைந்த ராஜ்நாத் மாலை வேண்டாம், அதனை எடுத்துச் செல்லுங்கள் என்று கறாராகக் கூறிவிட்டார்.
தெருக்கள்தோறும் மதுக்கடை திறந்தவர் கெஜ்ரிவால்
பஞ்சாப் சட்டப்பேரவைப் பொதுத் தேர்தல் பரப்புரைக்காக இன்று (பிப்ரவரி 17) அமிர்தசரஸ் வந்த ராஜ்நாத் சிங் கட்சியின் தொண்டர்களுடன் இணைந்து பொற்கோயிலுக்குச் சென்று வழிபட்டார். பின்னர் துர்க்கையானா மாதா கோயிலுக்கும் சென்றார்.
தொடர்ந்து பரப்புரைக் கூட்டத்திற்குச் சென்ற அவர், அம்மாநில முதலமைச்சர் சரண்ஜித் சிங் சன்னி, பிரியங்கா காந்தி ஆகியோரைத் தாக்கிப் பேசினார். மேலும், சரண்ஜித் சிங் சன்னிக்கும் - பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவுக்கும் இடையே நிலவும் பனிப்போர் குறித்து, 'ஒரே ஆடுகளத்தில் பேட்டிங்கிற்காகச் சண்டையிடும் விளையாட்டு வீரர்கள்' என வர்ணித்தார்.
இந்தப் பரப்புரையின்போது, அரவிந்த் கெஜ்ரிவாலையும் அவர் விட்டுவைக்கவில்லை. போதைப்பொருள் தொடர்பான ஆம் ஆத்மி கட்சியின் அறிக்கை குறித்தும் ராஜ்நாத் விமர்சித்தார். "கெஜ்ரிவாலால் போதைப்பொருள் இல்லா பஞ்சாபை உருவாக்க முடியாது, அவர்கள் (ஆம் ஆத்மி கட்சியினர்) டெல்லியின் தெருக்கள்தோறும் மதுக்கடைகளைத் திறந்துவைத்துள்ளனர்.
ஊழலுக்கு முடிவுகட்டிய பாஜக
போதைப் பழக்கத்தை முடிவுகட்ட காங்கிரசும் ஒன்றும் செய்யவில்லை. இந்தப் போதைப்பழக்கத்தை வேரறுக்கும் துணிச்சல் பாஜகவுக்கு மட்டுமே உள்ளது. ஒருமுறை நாங்கள் ஆட்சிக்கு வந்தபின், யார் இங்கு போதைப்பொருள் விற்பனை செய்கின்றார்கள் என்று பார்ப்போம்" என்று சவால்விடுத்தார்.
'நான் 100 காசுகள் அனுப்பினால் மக்களுக்கு 15 காசுகள்தாம் சென்றடைகின்றன' என்று முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி பயன்படுத்திய 'சொல்லை' சுட்டிக்காட்டிய ராஜ்நாத், காங்கிரசால் ஊழலை ஒழிக்க முடியவில்லை எனக் குற்றஞ்சாட்டினார். ஆனால், பாஜக ஆட்சியின்கீழ் 100 காசுகளும் மக்களின் பாக்கெட்டைச் சென்றடைவதாகவும், ஏனென்றால் ஊழலுக்கு முடிவு கட்டப்பட்டுவிட்டதாகவும் பெருமையுடன் குறிப்பிட்டார்.
இதையும் படிங்க: 'எனது முன்மாதிரி கோட்சே' - போட்டி நடத்திய அலுவலர் பணியிடை நீக்கம்!