தேசிய தலைநகர் டெல்லியில் உள்ள ஆர்ஆர் மருத்துவமனையில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று கரோனா தடுப்பூசியின் முதல் டோஸை போட்டு கொண்டார். மார்ச் 1ஆம் தேதி முதல் 60 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியது.
அதுமட்டுமின்றி, மற்ற நோய்களால் பாதிப்படைந்த 45 வயதுக்கு மேற்பட்டவர்களும் கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டது. இதற்கிடையே, தேசிய மாநாட்டு கட்சி தலைவரும் மக்களவை உறுப்பினருமான ஃபரூக் அப்துல்லா, தனது மனைவியுடன் இன்று கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.
இத்தகவலை, அவரது மகனும் ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சருமான உமர் அப்துல்லா உறுதிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் ட்விட்டர் பக்கத்தில், "ஸ்ரீநகரில் உள்ள எஸ்கேஐஎம்எஸ் மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர், பணியாளர்கள் ஆகியோருக்கு நன்றி. எனது 85 வயது தந்தையும் தாயும் கரோனா தடுப்பூசியின் முதல் டோஸை செலுத்தி கொண்டனர்.
சீறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட அவர் பல உடல் உபாதைகளால் பாதிக்கப்பட்டுள்ளார். அவரே தடுப்பூசி போட்டு கொள்ளும் போது, நீங்களும் செலுத்திக் கொள்ள வேண்டும்" என பதிவிட்டுள்ளார்.